Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நெல் சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியே இருக்காது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை

மதுரை: நெல் சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது, 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியே இருக்காது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருச்சியைச் சேர்ந்த விருமாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: காவிரி ஆற்று நீரை நம்பி திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்களின் குடிநீர் தேவையை காவிரி நீர் பூர்த்தி செய்கிறது.

பல்வேறு திட்டங்களுக்காக தண்ணீரை எடுப்பது, மணல் அள்ளுவது போன்ற காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்கு சென்று விட்டது. இதனால் காவிரி ஆற்றை நம்பி உள்ள விவசாயப் பகுதிகளில் விவசாயம் குறைந்து விட்டது. கடந்த 2020 ஏப்ரல் மாதம் சிவகங்கை கூட்டு குடிநீர் எனும் திட்டத்தின் கீழ், காவிரி ஆற்றில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியது. நாள் ஒன்றுக்கு 86.5 மில்லியன் லிட்டர் நீர் இதற்கென காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் நிலையில், கரூர் மாவட்டம், மருதூர் பகுதியில் தடுப்பணையை கட்டுமாறு மனு அளித்தோம்.

இதற்கு தடுப்பணை கட்டிய பின்பு குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டது. ஆனால் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கவில்லை. எனவே, கரூர் மாவட்டம் உமையாள்புரம், மருதூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும், அதுவரை சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் தற்போதைய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தேவைக்கான அரிசி கூட பிற மாநிலங்களில் இருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக பொன்னி போன்ற ரகங்களை தற்போது யாரும் பயிரிடுவதே இல்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியே இருக்காது என்றனர். பின்னர், சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மனுவிற்கு அரசு தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.