Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வருடத்திற்கு 3 டன் விதைநெல் உற்பத்தி... பாரம்பரிய ரகங்களைப் பரவலாக்கும் விவசாயி!

இப்போதிருக்கும் பெரும்பாலான நெல் ரகங்கள் மழை கொஞ்சம் வலுத்துப் பெய்தாலோ, காற்று பலமாக வீசினாலோ பெரும் சேதத்திற்கு உள்ளாகி விடுகின்றன. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டு, விவசாயி பாதிப்படைய வேண்டி இருக்கிறது. பெரும்புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களையெல்லாம் தாண்டி விளைந்து, மகசூல் தரும் வகையில் நமது பாரம்பரிய நெல் ரகங்கள் இருக்கின்றன. அவற்றில் பல வழக்கொழிந்து வரும் நிலையில் நெல் ஜெயராமன் போன்றவர்கள், அவற்றை மீட்டு மக்களிடம் மீண்டும் கையளித்து வருகிறார்கள். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் சுங்கரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பி.சஞ்சய் பெருமாள், தனது 4 ஏக்கர் நிலத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு, விதை நெல் உருவாக்கி, அதை பரவலாக்கம் செய்து வருகிறார். தனது நிலத்தில் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சஞ்சய் பெருமாளைச் சந்தித்தோம்.

`` எனது குடும்பத்தைப் பொறுத்தவரை நான்தான் முதல் தலைமுறை விவசாயி. அப்பா காலத்திலோ, அதற்கு முந்தைய தலைமுறையிலோ எங்கள் குடும்பத்தில் யாரும் விவசாயம் செய்யவில்லை. சிறுவயதில் இருந்தே எனக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். இதனால் சுமார் 40 வருடங்களுக்கு முன்பே எனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினேன். எங்கள் கிராமத்தில் பிரதான விவசாயம் என்றால் அது பூ சாகுபடிதான். சம்பங்கி, சாமந்தி, கோழிக்கொண்டை என பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படும். இதற்கிடையில் நான் மட்டும் கொய்யாவும், சில நெல் ரகங்களும் பயிரிட்டு வந்தேன். இத்தனை ஆண்டுகாலம் விவசாயம் செய்தாலும் ஆரம்பத்தில் நானும் ரசாயன முறையில்தான் விவசாயம் செய்தேன். ஒரு கட்டத்தில் ரசாயன முறை விவசாயம் தீங்கானது என தெரியவந்தது. இந்தத் தலைமுறையினருக்கு நஞ்சு கலந்த உணவுப்பொருட்களை விளைவிக்கிறோமோ என நினைத்தேன். இதனால் கடந்த 14 வருடங்களாக ரசாயனங்களைக் கைவிட்டு, இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். இயற்கை முறையில் விவசாயம் செய்வது மட்டுமல்லாமல், இந்திய அளவில் இருக்கிற பல வகையான பாரம்பரிய நெல் ரகங்களை விதைத்து, ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு வழங்கி வருகிறேன்.

எனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் மொத்தம் 150 வகையான பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு இருக்கிறேன். சுழற்சி முறையில் ஒரு வருடத்திற்கு விவசாயம் செய்து முடிக்கும்போது 200க்கும் மேலான பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடுவேன். எனது பண்ணையில் இருக்கிற விதைகள் அனைத்துமே பல ஆண்டுகளாய் இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விதை நெல்களாக இருக்கின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, இலங்கை உள்ளிட்ட இடங்களில் உள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் கூட எங்கள் பண்ணையில் இருக்கிறது. இங்கு விளைகிற அனைத்து ரகங்களின் விதை நெல் இந்தியா முழுவதும் செல்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 240 வகையான பாரம்பரிய நெல் இருந்தது. அது எல்லாமே அழிந்துபோன நிலையில் இருக்கிறது. அதன் விதைகள் கூட யாரிடமும் இப்போது இல்லை. இந்திய அளவில் ஆயிரத்திற்கும் மேலான பாரம்பரிய ரகங்கள் இருக்கின்றன. பல ரகங்கள் அழிந்துபோய் விட்டன. என்னால் முடிந்தளவு எனக்கு கிடைக்கிற விதைகளைப் பயிரிட்டு, என்னைப் போல பாரம்பரிய நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு கொடுப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.

பாரம்பரிய நெல் ரகங்களை விதைப்பது மட்டும் முக்கியமில்லை. அவற்றை எந்தவித ரசாயனமும் இல்லாமல் பயிர் செய்ய வேண்டும். அதுதான் நிலத்திற்கும் விவசாயத்திற்கும் நாம் ஆற்றும் உண்மையான கடமை. இத்தனை வருட விவசாயத்தில் பசுஞ்சாணம், பனம்பழக் கரைசல், பஞ்சகவ்யம் தவிர வேறு எந்த உரத்தையும் நான் பயன்படுத்தியது இல்லை. மற்ற பயிர்களை விட பாரம்பரிய நெல் பயிரிடுவதற்கு அதிக நாட்கள் தேவை. பராமரிப்பில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இதில் மகசூல் சற்று குறைவாகத்தான் கிடைக்கும். இவை அனைத்தையும் கடந்துதான், இந்த பாரம்பரிய விதைநெல் விவசாயத்தில் ஈடுபடுகிறேன். விவசாயம் செய்வதற்குத் தேவையான விதைநெல்லை நானே நேரடியாகச் சென்று தரம் பார்த்து வாங்குகிறேன். பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் இருப்பது தெரியவந்தால் எங்கிருந்தாலும் அதனை வாங்குவதற்கு சென்றுவிடுவேன். எவ்வளவு விதைகள் கிடைக்கிறதோ அந்தளவு விதைகளை எனது நிலத்தில் விதைத்து விதைகளைப் பெருக்கிக் கொள்வேன். எனது நிலத்தில் அனைத்து விதமான விதைகளையும் இரண்டு சென்ட், மூன்று சென்ட் அளவில்தான் பயிரிட்டு இருக்கிறேன். பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்திலும் மகசூல் எடுக்க அதிக நாட்கள் ஆகும். தற்போதிருக்கும் நெல் ரகங்களை விட கூடுதல் நாட்கள் எடுக்கும். 200 நாட்கள் கழித்து அறுவடை செய்யப்படுகிற பாரம்பரிய நெல் ரகங்கள் கூட இருக்கிறது. அசாம் மாநில பாரம்பரிய நெல்லான அக்னிபோராவையும் பயிரிட்டு இருக்கிறேன். அதனைத் தொடர்ந்து போக்கோசால், நீலம்சம்பா, குழியடிச்சான், பிசினி, புஷ்பம், ரத்தசாலி, கருப்பு கவுனி, மணக்கத்தை, பூங்கார், நவரை என பலவகையான ரகங்களை விதைத்து இருக்கிறேன். இவை அனைத்தையுமே இயற்கை முறையில்தான் சாகுபடி செய்கிறேன்.

ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு விதமான விவசாய முறை இருக்கிறது. சில ரகங்கள் உழுவதற்கு முன்பாகவே உயிர் உரங்கள் போட்டு மண்ணை நன்றாக உழ வேண்டும். சில ரகங்கள், எதையும் தாங்கி வளரும் பக்குவத்தில் இருக்கும். அதேபோல, பயிர்களுக்குத் தேவையான சமயத்தில்தான் மற்ற உரங்களைக் கொடுக்கிறேன். ஏனெனில், 14 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்வதால் எனது நிலம் இயற்கை விவசாயத்திற்கு பழக்கப்பட்டுவிட்டது. இங்கு விளைவிக்கப்படும் எந்தப் பயிருக்கும் அதிகப்படியான உரங்களோ, மருந்துகளோ தேவைப்படாது. சரியான நேரத்தில் விதைத்து, உரிய பருவத்தில் களையெடுத்து, வாடாமல் தண்ணீர் கொடுத்து வந்தாலே பயிர்கள் நன்றாக வளர்கிறது. எனது நிலத்தில் விளைகிற ரகங்கள் போக நண்பர்களின் நிலத்திலும் வேறு வகையான ரகங்களை விதைத்து, விதை நெல் எடுக்கிறேன். அதாவது ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 3 டன் பாரம்பரிய

நெல் விதைகளை விதைத்து மகசூல் பெறுகிறேன். இதில் கிடைக்கும் விதை நெல்லை இந்தியா முழுவதும் உள்ள பல்லாயிரம் விவசாயிகளுக்கு தருவதால், அவர்களுடன் நேரடி பழக்கம் ஏற்படுகிறது. இதனால் இந்தியா முழுக்க எனக்கு தொடர்பை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன நமது பாரம்பரிய நெல் ரகங்கள்’’ என பெருமிதத்துடன் கூறி முடித்தார் சஞ்சய் பெருமாள்.

விதை நெல்லைப் பாதுகாக்க...

எந்தவொரு நெல் ரகத்தையும் விதை நெல்லாக பயன்படுத்த வேண்டுமென்றால், அறுவடை செய்து குறைந்தது 3 மாத காலம் கழித்துதான் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் விதைநெல் வீரியமானதாக இருக்கும். அதுபோல, விதைநெல் தரமானதா? என்று கண்டுபிடிக்க உப்புநீரில் அந்த விதைகளைப் போட்டுப் பார்க்க வேண்டும். நீரில் மிதக்கும் விதைகளைப் பயன்படுத்தக்கூடாது. அவை தரம் குறைந்தவை. நெல் விதைகளை அடுத்த வருடங்களில் பயன்படுத்துவதற்கு இருப்பு வைக்க வேண்டுமென்றால், காற்று நன்றாக சென்றுவரும் வகையிலான கோணிப்பையில் விதைகளை வைக்க வேண்டும். பிளாஸ்டிக் கவரில் வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால் காற்றில்லாமல் விதைகள் அவிந்துவிடும்.