நடப்பாண்டில் அதிகப்படியான நெல் வரத்தால் 25 திறந்தவெளி சேமிப்பு கிடங்கு திறக்க அனுமதி: அமைச்சர் சக்கரபாணி தகவல்
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கீழ்வேளூர் எம்எல்ஏ வி.பி.நாகைமாலி (சிபிஎம்) பேசுகையில்,‘டெல்டா மாவட்டத்திலே, இந்த ஆண்டு குறுவை விவசாயம் கடந்த ஆண்டைவிட 4 பங்கு கூடுதலாக செய்யப்பட்டிருக்கிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுடைய நெல்லை கொள்முதல் செய்கிறார்கள். கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் லாரியில் ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்தால் இன்னும் கூடுதலாக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும். விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும்,’என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல், மற்ற மாவட்டங்களிலும், இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்திருக்கிறது. இன்றைக்கு வெளிச்சந்தைகளில் வியாபாரிகள் நெல்லை விற்பனை செய்ய ஆர்வம் காட்டவில்லை. அதனாலும், குறுவை சாகுபடியின் அமோக விளைச்சலாலும், வரலாறு காணாத அளவில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்ட ஆட்சி தலைவருடன் நாங்கள் கூட்டத்தை நடத்தி, கூடுதல் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
கடந்த கொள்முதல் பருவத்தில் 13-10-2024 வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல் 3.3 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். ஆனால், நடப்பாண்டில் நேற்று வரை 1,805 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 9,02,468 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 1,16,950 விவசாயிகளுக்கு சுமார் ரூ.2,152 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு 3.3 லட்சம் மெட்ரிக் டன் நெல்தான் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு சுமார் 9 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5½ லட்சம் மெட்ரிக் டன்னிற்கும்மேல் நெல்வரத்து அதிகரித்திருக்கிறது.
நடப்பு கொள்முதல் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து அரிசியாக்கி அதனுடன் செறிவூட்டப்பட்ட அரிசியை கலக்க வேண்டும். 34,000 மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல் செய்திட பணியாணை வழங்கப்பட்டது. இதற்கான தர உறுதி ஒப்புதல் ஒன்றிய அரசிடமிருந்து பெற வேண்டியுள்ளதால், நடப்புப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 9 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை உடனுக்குடன் அரவை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், அவை சேமிப்புக் கிடங்குகள் மற்றும் அரவை ஆலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால்தான், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இன்னும் 3, 4 தினங்களில் அதற்கான தர உறுதி ஒப்புதலை ஒன்றிய அரசு அளித்துவிடும். அது பெறப்பட்டவுடன், கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தையும் அரவை செய்து அரிசியாக்கி அதனுடன் செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்து பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். அதனால்தான், காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் அதிகப்படியான நெல் வரத்தின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் 3.3 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 25 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு, 77,196 மெ.டன் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் தேக்கம் குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.