Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி நெல் கொள்முதல் விலையை உயர்த்தியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த அமைச்சர்கள்..!!

சென்னை: தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி நெல் கொள்முதல் விலையை உயர்த்தியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் வாழும் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக விவசாயிகள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன்களைக் காப்பதே திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கங்களில் ஒன்று என்று விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

ஒன்றிய அரசு 2025-2026ஆம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்துள்ளது. ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் நெல் கொள்முதல் விலையைவிட விவசாயிகளுக்கு கூடுதல் விலை வழங்கும் திட்டத்தை கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தினார்கள்.கலைஞர் வழியில் தமிழ்நாட்டின் நலம் காத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசு இந்த ஆண்டில் நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545 என உயர்த்தியுள்ளார்கள். அதே போல, பொதுரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500 என உயர்த்தியுள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் உயர்த்தி நிர்ணயித்துள்ள நெல் கொள்முதல் விலையில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 1.9.2025 முதல் 31.8.2026 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். இதற்கான முதலமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு 29.8.2025 அன்று அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, இந்த ஆண்டில் விவசாயிகளிடமிருந்து மொத்தம் 42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இதில் சன்ன ரக நெல் 30 லட்சம் மெட்ரிக் டன். பொதுரக நெல் 12 லட்சம் மெட்ரிக் டன்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் 2024-2025 நெல் கொள்முதல் பருவத்தில் 47.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.முதலமைச்சரின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 44 ஆயிரத்து 777 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் திராவிட மாடல் அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ள ஊக்கத் தொகை மட்டும் 2 ஆயிரத்து 31 கோடியே 29 லட்சம் ரூபாய் ஆகும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரும்பாடுபட்டு விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லில் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்ற உன்னத இலட்சியத்துடன் கொள்முதல் செய்யப்படும் நெல்லை திறந்தவெளியில் வைத்திடக் கூடாது என்பதற்காக 827 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் 7 லட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்களைக் கட்டியுள்ளார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் வாழ்வாரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தியுள்ளது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி இருவரும் இன்று (30.8.2025) நேரில் சந்தித்து நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தந்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமைக்காக நன்றி தெரிவித்தார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.