கூடலூர் : கூடலூர் சுற்றுவட்ட பகுதிகளான பாடந்துறை, செறுமுள்ளி, புத்தூர்வயல், குனில்வயல், புளியம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் வயல்களில் நாற்றுகள் நடவுசெய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொள்வது வழக்கம்.
நாற்றங்கால்களில் நாற்றுக்கள் உருவாக்கி பின்னர் வயல்களில் நாற்றுக்களை நடவுசெய்யும் முறையும், வயல்களில் நெல் விதைகளை வீசி நடவு செய்யும் வீச்சுநடவு முறையும் இப்பகுதிகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.
நாற்று நடவு பணிகள் ஓரளவு நிறைவுற்று வரும் நிலையில் தற்போது வீச்சுநடவு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. பாரம்பரிய நெல் வகைகளான மர நெல், கொடுவாய், சிந்தாமணி, இவற்றுடன் பாரதி போன்ற நெல் வகைகளும் பயிரிடப்படுகிறது.
சீரகசால், கெந்தகசால் போன்ற பாரம்பரிய நெல் வகைகள் பயிரிடப்படுவது தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், இவற்றை காட்டு யானைகள் சேதப்படுத்துவது அதிகம் என்பதால் இந்த வகை பயிரிடப்படுவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தற்போது நெல் விவசாயம் குறைந்துவரும் நிலையில் ஒரு சில குறிப்பிட்ட விவசாயிகள் மட்டுமே நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல் விவசாயத்தில் பெரிய அளவிலான வருமானம் கிடைப்பதில்லை என்று கூறும் விவசாயிகள் தங்களின் சொந்த தேவைகளுக்காகவே வயல்களில் நெல் பயிரிட்டு வருகின்றனர்.