விவசாயிகள் தங்கள் அனுபவத்தில் இருந்து புதிது புதிதாக சில அற்புதங்களைச் செய்து அசத்துகிறார்கள். அந்த வரிசையில் தஞ்சாவூர் அருகே உள்ள மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நெல் நடவுக்கு காகித நடவு முறை என்ற ஒரு முறையைச் செயல்படுத்தி அசத்தி இருக்கிறார். ஐடிஐ படித்த இவர் இந்த புதிய முறை மூலம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை நெல் இருந்தால் போதும் என அடித்துக் கூறுகிறார். அந்தப் பகுதியில் விவசாய விஞ்ஞானி என பலராலும் அழைக்கப்படுகிற ரமேஷை ஒரு காலை வேளையில் சந்தித்தோம்.
தஞ்சை மாவட்டத்தில் லட்சக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 45 கிலோ விதை நெல் பயன்படுத்தப்படுகிறது காகித முறை நடவு செய்வதன் மூலம் காகித முறையில் 5 கிலோ விதை நெல் இருந்தால் போதும். இதனால் ஒரு ஏக்கருக்கு 40 கிலோமிச்சம் ஆகிறது. தஞ்சையில் மூன்று போகம் விவசாயம் செய்யப்படுகிறது. அப்படி என்றால் எத்தனை கிலோ விதை நெல் மிச்சம் ஆகும் என்று பாருங்கள். இதில் ஆட்கள் தேவையும் குறைகிறது.தற்போது நாற்றங்கால் தயார் செய்ய ஏக்கருக்கு இரண்டு ஆட்கள் தேவைப் படுகிறார்கள். பிறகு உழுது வயலை சரி செய்ய நடவு செய்வதற்கு இரண்டு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். நாற்று பறிக்க ஏக்கருக்கு 5 ஆட்கள் தேவைப் படுகிறார்கள். இப்படி கணக்கெடுத்தால் நடவு செய்ய ஏக்கருக்கு 15 ஆட்கள் தேவைப்படுகிறார்கள். களை எடுக்க ஏக்கருக்கு 10 ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆகமொத்தம் ஒரு ஏக்கர் நடவு செய்வதற்கு 24 ஆட்கள் தேவைப்படுகிறார்கள். காகித நடவு செய்வதன் மூலம் அதாவது ஒழுங்குமுறை நேரடி நெல் விதைப்பு காகித முறையில் நடவு செய்வதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 2 ஆட்கள் இருந்தாலே போதுமானது. என்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த முறையில் சாகுபடி செய்துள்ளேன்.
நேரடி நெல் விதைப்பு முறைக்கு ‘மதிப்பு கூட்டும்’ யுக்திதான் இந்த காகித நடவு முறை. இதில் புதுமையும், அறிவியலும் இணைந்துள்ளது. காகித உறையில் வேப்பம் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு கலந்த அடி உரம் வைத்து அதில் விதை நெல்லை வைப்பதுதான் காகித நடவு முறை. விதை நெல்லை காகிதத்தில் சுருட்டி வைக்காமல் நீண்ட காகித உறையில் அரை அல்லது முக்கால் அடி இடைவெளி விட்டு நெல் விதைகளை உரத்துடன் வைக்க வேண்டும். இந்த நெல் நிரப்பப்பட்ட காகித உறை நீண்ட நாடா மாதிரி அமைந்துவிடும். அதை சுருளாக சுற்றி வைப்போம். தண்ணீர் பாய்ச்சி சேறும் சகதியுமாய் இருக்கும் வயலில், நீரை வடித்துவிட்டு காகித விதைச் சுருளை நூல் பிடிப்பது போல பிடித்து மண்ணின் மேல்புறம் அழுத்தி வைப்போம். நிலத்தின் ஈரத்தில் காகித நாடா நனைந்து மண்ணோடு ஒட்டிக் கொள்ளும். விதையும் அந்த ஈரத்தில் ஊறி மூன்று நாட்களில் முளைவிடும். காகிதம் மக்கிப் போகும். காகிதச் சுருளில் விதையுடன் அடி உரம் வைக்கப்பட்டு விடுவதால் முளைப்புத்திறன் சிறப்பாக அமையும். பயிர்களும் சமச்சீரான இடைவெளியில் ஒரு நேர்க்கோட்டில் வரிசையாக நின்று வளரும். இது நீர் மேலாண்மையை நிர்வகிக்கவும் பெரிய அளவில் உதவிபுரிகிறது. வழக்கமான சாகுபடி முறைக்கு தேவைப்படும் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு இருந்தால் போதும்.
காகிதச்சுருளை உருவாக்கும் கருவியை நானே கண்டு பிடித்தேன். நான் ஐடிஐ படித்திருப்பதால் சொந்தமாக இரும்புத்தொழில் பட்டறை நடத்தி வருகிறேன். அதிலேயே இந்தக் கருவியை வடிவமைத்தேன். நான் வடிவமைத்த கருவியை நானே செயல்படுத்தி நல்ல பலனை கண்கூடாக கண்டு வருகிறேன். இதில் விதை நெல்லானது சேற்றுக்கு மேல் இருப்பதால் வேர்களும், தூர்களும் அதிகமாக வருகின்றன. மேலும் வேர்கள் பூமிக்கு மேல் இருப்பதால் நாம் விடும் உரங்கள் மருந்துகளை எளிதில் எடுத்துக்கொண்டு நன்றாக வளர்கின்றன. இதன்மூலம் அதிக நெல் மணிகள் மகசூலாக கிடைக்கின்றன. இதை நான் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து இருக்கிறேன்’’ என்கிறார். (இக்கருவி குறித்த மேலதிக தகவல்கள் அடுத்த இதழில் இடம்பெறும்)
தொடர்புக்கு:
ரமேஷ் - 91599 94285.