Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதியின்மை காரணமாக லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

காவிரி டெல்டா பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்குச் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், விளைவித்த நெற்பயிர்களைக் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை கண்டித்துப் போராட வேண்டிய சூழலுக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மகசூலுக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களைத் திறக்காததும், ஏற்கனவே உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதியை ஏற்படுத்தித் தராததுமே லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைய முக்கிய காரணம் என டெல்டா பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இயற்கை பேரிடர்களையும், பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு விளைவித்த நெற்பயிர்கள் உரிய நேரத்தில் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படாததும், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாவதும் காவிரி டெல்டா விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, பருவமழை தீவிரமடையத் தொடங்கியிருக்கும் நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, தற்காலிக கொள்முதல் நிலையங்களை அமைத்துத் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை முழுமையாகக் கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.