இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் இறந்த விவகாரம் கோடம்பாக்கத்தில் பதுங்கி இருந்த மருந்து நிறுவன உரிமையாளர் கைது: சென்னை போலீஸ் உதவியுடன் ம.பி. தனிப்படை அதிரடி
சென்னை: மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் இறந்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த மருந்து நிறுவன உரிமையாளரை சென்னை போலீசார் உதவியுடன் ம.பி. தனிப்படை போலீசார் நேற்று கோடம்பாக்கத்தில் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் மருத்துவர்கள் பரிந்துரைப்படி வழங்கப்பட்ட மருந்து சாப்பிட்ட குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து 22 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் ‘சன் பார்மா’ என்ற மருந்து நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்ரிப்’ என்ற வகையை சேர்ந்த இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்தது சோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்த மருந்தில் அதிகளவில் ‘டை எத்திலீன் கிளைசால்’ நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 100 மடங்கு சேர்க்கப்பட்டதால் இந்த இறப்பு தெரியவந்தது.
இதுகுறித்து மத்திய பிரதேச சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ‘ஸ்ரீசன் பார்மா’ மருந்து நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், மருத்துவ சட்ட விதிகளுக்கு புறம்பாக குடிசை தொழில் போல் இந்த நிறுவனம் குழந்தைகளுக்கு மருந்து தயாரித்து நாடு முழுவதும் ஏற்றுமதி செய்தது சோதனையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து அதிரடியாக ‘ஸ்ரீசன் பார்மா’ மருந்து நிறுவனத்தை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இதற்கிடையே 22 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் பராசியா காவல் நிலைய போலீசார் தரமற்ற மருந்து தயாரித்த ‘ஸ்ரீசன் பார்மா’ மருந்து நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ரங்கநாதன் (75) மீது 105, 276, பிஎன்எஸ் 27ஏ ஆக்ட் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தன் மீது ம.பி. போலீசார் வழக்கு பதிவு செய்த தகவலை அறிந்த மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து மத்திய பிரதேச போலீசாரின் தனிப்படையினர், நேற்று முன்தினம் இரவு ரங்கநாதனை கைது செய்ய சென்னைக்கு வந்தனர். பின்னர் சென்னை பெருநகர காவல்துறையின் முன் அனுமதி பெற்று ரங்கநாதனை அசோக் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் துணையுடன் மத்திய பிரதேச தனிப்படையினர் நேற்று அதிகாலை, அசோக் நகர் காவல் எல்ைலக்குட்பட்ட கோடம்பாக்கம் நாகர்ஜூன் நகர் 2வது தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ரங்கநாதனை தனிப்படை போலீசார் சுங்குவார்சத்திரத்தில் உள்ள மருந்து தயாரித்த தொழிற்சாலைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதைதொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரங்கநாதனை தனிப்படையினர் மத்திய பிரதேசத்திற்கு அழைத்து சென்றனர்.