நியூயார்க்: தனது சொந்த மக்கள் மீதே குண்டு வீசுவதாகவும், இனப்படுகொலையை நடத்துவதாகவும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் வலுவான பதிலடியின்போது தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது பாகிஸ்தான் ஜம்மு -காஷ்மீர் பிரச்னையை எழுப்பியது. இதனை தொடர்ந்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரீஷ் பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுத்தார்.
அவர், பேசுகையில்,\\”ஒவ்வொரு ஆண்டும் துரதிஷ்டவசமாக எனது நாட்டிற்கு எதிராக குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு எதிராக பாகிஸ்தான் விரும்பும் இந்திய பிரதேசத்துக்கு எதிராக பாகிஸ்தானின் மாயையான வசைபாடல்களை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தனது சொந்த மக்களை குண்டு வீசி தாக்கி, திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு. ஆபரேஷன் சர்ச்லைட் என்ற பெயரில் 4 லட்சம் பெண்களை பாகிஸ்தான் ராணுவம் சீரழித்தது. அதனால் தவறான வழிகாட்டுதல் மற்றும் மிகைப்படுத்துதல் மூலமாக உலகை திசைத்திருப்ப மட்டுமே முயற்சிக்க முடியும்\\” என்றார்.