திருமங்கலம்: திருமங்கலத்தில் மேம்பாலப் பணியால் விமானநிலையச் சாலையில் தூசு பறப்பதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் காமராஜபுரத்தில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. திருமங்கலம்-மதுரை விமானநிலைய ரோட்டில் தேவர் சிலை அருகிலிருந்து வேளாண்மை விரிவாக்க மையம் வரை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக சர்வீஸ் ரோடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மேம்பால பணியால் தேவர் சிலையிலிருந்து காமராஜபுரம், கற்பகம் நகர் வழியாக ஆலங்குளம் செல்லும் சாலையில் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது.
பாலப்பணி காரணமாக சாலையில் இருந்த தார் முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்டது. இதனால் தேவர் சிலையிலிருந்து வேளாண்மை விரிவாக்க மையம் வரை சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் தூசு கிளம்புகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் காமராஜபுரம், கற்பகநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 24 மணி நேரமும் பறக்கும் தூசி புகைமண்டலத்தால் அலர்ஜி, மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பாலப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் எனவும், சாலையில் தூசு பறக்காமல் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
