Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரே இரவில் உலகப்பணக்காரர் ஆன நொய்டா இளைஞர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ஒரு பில்லியன் லட்சம் கோடி ரூபாய்

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்துக்குட்பட்ட என்சிஆர் நகரமான நொய்டாவை சேர்ந்த இளைஞர் திலீப் சிங் (வயது 20). தாய், தந்தையை இழந்த இவர் தனது பாட்டி மாயா தேவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் திலீப் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது புதிய செல்போனில் 2 மாதங்களுக்கு முன்பு இறந்துபோன தனது தாய் காயத்ரி தேவியின் வங்கி கணக்கை சோதிக்க தனியார் வங்கியின் செயலியை திறந்து பார்த்தார். அப்போது வங்கி கணக்கு இருப்பு தோன்றியபோது, திலீப் நம்ப முடியாமல் புருவம் உயர்த்தினார்.

தாயாரின் வங்கி கணக்கில் 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 ரூபாய் உள்ளதாக அதில் காட்டியது. 37 இலக்கங்கள் கொண்ட இந்த எண்ணை கூட்டி தொகையை கணக்கிடுவது என்பது பட்டப்படிப்பு படித்தவர்களுக்கே கடினம். திலீப்போ 12ம் வகுப்பை பாதியில் நிறுத்தியவர். பல மணி நேரம் செலவிட்டு எவ்வளவு தொகை என்பதை அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதையடுத்து, அவர் அதை ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பி அது எவ்வளவு என கேட்டுள்ளார். அவர்களில் சிலர் அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலனாது. இதனிடையே திலிப் தனது பாட்டியிடம் யோசனை கேட்டபோது அவர் கொஞ்சம் பணத்தை யாருக்காவது அனுப்பி சோதித்து பார் என கூறினார்.

அதன்படியே திலீப் பணம் அனுப்ப முயன்றபோது, அது நடக்கவில்லை. மாறாக வங்கியில் தொழில்நுட்ப சிக்கல் இருப்பதாக அதில் காட்டியது. இதையடுத்து மறுநாள் காலையில் திலீப் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிக்குச் சென்று தனது செல்போனை காட்டினார். அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற அவர்கள் வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் ஒரு பில்லியன் லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த வங்கி கணக்கை முடக்கிய அதிகாரிகள், வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இறந்தவரின் வங்கி கணக்கிற்கு ஒரு பில்லியன் லட்சம் கோடி ரூபாய் எவ்வாறு வந்தது? அனுப்பியது யார்? வங்கி தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறா? என பல்வேறு கோணங்களில் வருமான வரித் துறையினர் விசாரிக்கின்றனர்.

* நச்சரித்த நண்பர்களால் செல்போன் சுவிட்ச் ஆப்

இதற்கிடையில் திலீப் தாயாரின் வங்கி கணக்கில் ஒரு பில்லியன் லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியதால், இதுப்பற்றி விசாரிக்க அவரது நண்பர்களும், உறவினர்களும் தொடர்ச்சியாக அவருக்கு போன் செய்து கொண்டே இருந்தனர். கைமீறிச் சென்ற நிலைமையை விவரிக்க முடியாமல் அவர் தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

* ‘கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல’

ஒரே இரவில் உலகப்பணக்காரர் ஆகும் அளவுக்கு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டபோதிலும் அதில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாமல்போனது ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்று சொல்வதுபோல ஆனது திலீப்புக்கு நடந்த இந்த சம்பவம்.