Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒட்டுமொத்த உணவுத்துறைக்கும் உதவ கூடுதலாக உழைப்போம் இன்னும் பல திட்டங்கள் வருகிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: ஒட்டுமொத்த உணவுத் துறைக்கும் உதவ கூடுதலாக உழைப்போம். எதிர்பார்த்திருங்கள், நம் மாநில நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இன்னும் பல திட்டங்கள் வர இருக்கின்றன என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ்தள பதிவு: தமிழ்நாட்டு மக்களால் அதிகம் விரும்பப்படும் உணவு நிறுவனங்களைக் கூட சிலர் ஏளனம் செய்வதையும் பார்க்க முடிகிறது. அவமரியாதை நிலைமையை மாற்றி, சுயமரியாதையை உருவாக்கும் வகையில், கோவையில் கையெழுத்திடப்பட்டிருக்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏதோ சிறிய அளவிலான சமையல் தொழில்களுக்கும் சின்னச் சின்ன ஓட்டல்களுக்குமான ஒப்பந்தமல்ல. வளர்ச்சி மிகுந்த தொழில்துறை அளவிலான உணவு உற்பத்தி, குளிர்பதனச் சங்கிலிகள், ஏற்றுமதி, உணவு விற்பனையில் உலகளாவிய சில்லரை வணிக விரிவாக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளுக்கான ஒப்பந்தங்கள் இவை.

நம் சொந்த மண்ணில் உள்ள நிறுவனங்களைப் புறக்கணித்துவிட்டு, ஏன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நம் கேள்வி. அமெரிக்க அல்லது ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் திறனையும் வணிகத்தையும் நம் மண்ணில் வளர்த்துக்கொள்ள விரும்பும்போது தமிழ்நாடு உதவுகிற நிலையில், ஏற்கனவே நம் மண்ணில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உணவுத் தொழிலில் நம்பிக்கையை வளர்த்து, உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சிக்குப் பல ஆண்டுகளாகத் துணை நிற்கிற நம் சொந்த மண்ணின் நிறுவனங்களை நாம் தானே ஆதரிக்க வேண்டும்?

நம் மாநிலத்தில் உள்ள நிறுவனங்கள்தான் நமக்கு உணவளிக்கின்றன, வேலை வாய்ப்பை தருகின்றன. அவர்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி கிடைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக வெளிநாட்டு நிறுவனங்களைப் போல உள்நாட்டு வணிக நிறுவனங்களும் ‘பெரிய கனவுகளைக் காண’ தகுதியானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் மாநில உணவு நிறுவனங்களை அவமானப்படுத்துவது என்பது அவர்களின் கடின உழைப்பை அவமதிப்பதாகும். அவர்களின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பதே வலுவான தமிழ்நாட்டை கட்டமைக்கும். அதனால் நம் சொந்த மண்ணின் நிறுவனங்களை ஆதரிப்போம். ஒட்டுமொத்த உணவுத் துறைக்கும் உதவ நாங்கள் கூடுதலாக உழைப்போம். எதிர்பார்த்திருங்கள், நம் மாநில நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இன்னும் பல திட்டங்கள் வரவிருக்கின்றன.