வெளிமாவட்ட மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடிப்பதை தடுக்க கோரி கோடியக்கரை மீனவர்கள் கருப்புகொடியுடன் ஆர்ப்பாட்டம்
நாகை: வெளிமாவட்ட மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடிப்பதை தடுக்க கோரி கோடியக்கரை மீனவர்கள் கருப்புகொடியுடன் கடலில் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாளுக்கா கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் பல்வேறு மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் அயிரகணக்கில் கோடியக்கரைக்கு வந்து குடும்பதினருடன் தங்கி மீன்பிடிப்பது ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகிறது.
இந்த காலகட்டத்தில் வெளியூர் மீனவர்கள் அதிகளவில் கோடியக்கரையில் தங்கி மீன் பிடிப்பதால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பினர் இடையே பிரச்சனை நிலவிவருகிறது. இந்தநிலையில், வெளிமாவட்ட மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடிக்க கூடாது என என்று நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோடியக்கரை மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் பலமுறை இருதரப்பினர் இடையே சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று ஆற்காட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி ஆகிய 4 மீனவ கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வெளிமாவட்ட மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடிப்பதை தடுக்க கோரியும், வெளிமாவட்ட மீனவர்கள் வேதாரண்யம் பகுதியில் மீன்பிடிப்பதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் கைகளில் கருப்பு கொடி ஏந்தி ஆற்காட்டுதுறை கடலில் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு சுமூக தீர்வு காணவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.