Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வழக்கொழிந்து போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்: நினைவுகளில் மட்டுமே நிழலாடுகிறது

தைமகள் பிறந்த நாளை தரணியெல்லாம் பொங்கல் வைத்து தமிழினம் கொண்டாடுகிறது. சூரியப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என்று இயற்கைக்கும், அது சார்ந்த கால்நடைகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் கொண்டாட்டங்கள் தற்போது குதூகலத்துடன் கொண்டாடப்பட்டாலும், காலத்தால் சற்றே மாறுபட்டு நிற்கிறது என்றால் அது மிகையல்ல. அதிலும் கடந்த 20 ஆண்டுகளில் பொங்கலுக்கு நாம் மறந்த நிகழ்வுகளில் ஒன்றாக இருப்பது வாழ்த்து அட்டைகள்.

கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, தமிழ் புத்தாண்டு, பிறந்த நாள், திருமண நாள், காதலர் தினம், நண்பர்கள் தினம் உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து அட்டை, போஸ்ட் கார்டுகள் மூலம் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிப்பது வாடிக்கையாக இருந்தது. இதற்காக வண்ணமயமான வாழ்த்து அட்டைகள் சிவகாசி, சென்னையில் தயாரிக்கப்பட்டது. பண்டிகை நாட்களில் ஒரு வாரத்திற்கு முன்பே, இந்த வாழ்த்து அட்டைகள் பேன்சி ஸ்டோர், புக் ஸ்டால், மளிகை கடைகளில் விற்பனைக்காக தொங்க விடப்படும்.

இதை இளைஞர்கள், இளம்பெண்கள் வாங்கி, அதில் வாழ்த்துக்கள் எழுதி தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். வாழ்த்து அட்டை பெறும் நபர்கள், அதை பிரித்து பார்த்து மகிழ்ச்சியில் திளைப்பார்கள். இதுபோன்ற வாழ்த்து அட்டைகளை, ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் பலர் நினைவு பரிசாக பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். இப்படி பல லட்சம் மனங்களை ஈர்த்த வாழ்த்து அட்டை கலாச்சாரம் மறைந்து விட்டது. 2000ம் ஆண்டுக்கு பிறகு, செல்போன் வரவால் வாழ்த்து அட்டை கலாச்சாரம் 50 சதவீதம் சரிந்தது.

அப்போது, செல்போனில் மெசேஜ் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். 2012ம் ஆண்டுக்கு பிறகு ஆண்ட்ராய்டு செல்போன்கள் புழக்கம் அதிகரித்தது. அதன் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் வரவால் வாழ்த்து அட்டை கலாச்சாரம் சுத்தமாக மறைந்து போய் விட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி கடைகளில் பொங்கல் வாழ்த்து அட்டை விற்கப்படுகிறதா என்று தேடி பார்த்த போது, ஒரு கடையில் கூட வாழ்த்து அட்டை இல்லை என்பது வேதனைக்குரிய தகவலாக கிடைத்தது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘2000ம் ஆண்டுக்கு முன்பு வரை வாழ்த்து அட்டை கலாச்சாரம் கொடி கட்டி பறந்தது. 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்த்து அட்டைகள் வியாபாரம் சுறுசுறுப்பாக இருந்தது. இதற்காக பல வண்ணங்களில் வாழ்த்து அட்டையை விற்பனைக்கு வைப்போம். எப்போது செல்போன் வளர்ச்சி தலை தூக்க ஆரம்பித்ததோ அன்று முதல் வாழ்த்து அட்டை அனுப்புவது 95 சதவீதம் குறைந்தது. இன்று ஒரு வாழ்த்து செய்தியை செல்போன் மூலம் குறைந்த செலவில் பல்லாயிரம் பேருக்கு அனுப்புகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வாழ்த்து அட்டை கேட்டு ஒரு வாடிக்கையாளர்கள் கூட கடைக்கு வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது,’’ என்றனர்.