Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்துக்கு நன்கொடை வசூலா? பள்ளி கல்வித்துறை விளக்கம்

சென்னை: “நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி” திட்டத்தின் வாயிலாக நன்கொடைகளை வசூலிக்க பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ள கருத்துக்கு பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: “நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி” திட்டத்தின் வாயிலாக நன்கொடைகளை வசூலிக்க பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுவதாக முன் வைக்கப்பட்டுள்ள எவ்வித அடிப்படையில்லா குற்றச்சாட்டுகளையும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக மறுக்கிறது. நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி (NSNOP), நிறுவனங்கள் சட்டம் பிரிவு 8ன் கீழ் (லாப நோக்கமின்றி அறிவியல், கலை, கல்வி, சமூக நலன் போன்ற துறைகளில் செயல்படும் நிறுவனங்கள்) தமிழ்நாட்டு அரசினால் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும்.

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளின் கல்விச் சூழலையும் கட்டமைப்புகளையும் மேம்படுத்த தன்னார்வ பங்களிப்புகள் மற்றும் நிறுவன சமூகப் பொறுப்பு நிதியளிப்புகள் ஆகியவற்றை முறைப்படுத்தும் நோக்கத்துடன் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. எந்த ஒரு அரசு அலுவலரோ, தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ எவ்வித நிதியையும் பெற நியமிக்கப்படவோ அதிகாரமளிக்கப்படவோ இல்லை. மாறாக, பள்ளி மேலாண்மைக் குழுவுடன் கலந்தாலோசித்து தங்கள் பள்ளியின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை பள்ளிக் கல்வித் துறையின் பெற்றோர் செயலியில் (TNSED Parent App) பதிவிடும் நிர்வாகப் பணியினைச் செய்வது மட்டுமே அவர்களின் பங்காக இருக்கிறது.

இதுவரை, 885 நிறுவனங்கள் (தொழில்துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை) மற்றும் 1,500க்கும் மேற்பட்ட தனிநபர்கள் — இவர்களில் பலர் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் பெருமைமிக்க முன்னாள் மாணவர்களாகும் — தன்னார்வத்துடன் சுமார் ₹860 கோடி ரூபாயை பள்ளிகளின் மேம்பாட்டிற்காக வழங்கியுள்ளனர். 200க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் ஆண்டுதோறும் தொடர்ந்து இந்த திட்டத்துக்கு ஆதரவு அளித்து வருவது என்பது, இத்திட்டத்தின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மை மீது ஏற்பட்டுள்ள சமூக நம்பிக்கையின் உறுதியான சான்றாகும்.இத்திட்ட வளர்ச்சியை சிதைக்கும் வகையில் பரப்பப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஒதுக்கி, நம்பகமான தகவல்களை மட்டுமே பள்ளிக் கல்வித் துறை கேட்டுக்கொள்கிறது.