Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எங்கள் குடும்பங்கள் நடுரோட்டில்... மறந்துவிட்டீர்களே விஜய் அண்ணா? திருச்சியில் பரபரப்பு போஸ்டர்: சமூக வலைதளங்களில் வைரல்

திருச்சி: மறந்து விட்டாயே விஜய் அண்ணா!.... எங்கள் குடும்பங்கள் நடுரோட்டில் நிற்பதா?... என விபத்தில் உயிரிழந்த 2 தொண்டர்கள் ஆத்மா வாயிலாக பேசுவது போல் திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வாசகங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கரூரில் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதில் பாதிக்கப்பட்டவர்களை 5 சொகுசு பஸ்களில் மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஓட்டலில் தங்க வைத்து விஜய் நேற்று ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்.27ம் தேதி நடைபெற்றபோது காரில் சென்ற தவெக திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், துணை தலைவர் கலை ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். இருவரின் முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி திருச்சி மாநகர் முழுவதும் இருவருக்கும் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

‘வீர தேவேந்திர மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை’ என்ற பெயரில் திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், விபத்தில் பலியான இருவரின் ஆத்மாக்கள் பேசுவது போல் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது. அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு: சீனிவாசன், வழக்கறிஞர் மற்றும் உறையூர் கலை ஆத்மா வாயிலாக, தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் உயிர் நீத்தோம் எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா! 15 ஆண்டு காலமாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம் எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா! கட்சி மாநாட்டிலும், பொதுக்கூட்டத்திலும் கூட எங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லையே விஜய் அண்ணா!.

முதல் சுற்றுப்பயணம் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தாயே விஜய் அண்ணா! அப்போது எங்களுடைய உழைப்பில் முதல் வெற்றியை பெற்றீர்களே, அப்போது கூட எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா! கரூர் துயர சம்பவத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தத்து பிள்ளையாக இருப்பேன் என்று உறுதி அளித்து உள்ளீர்களே விஜய் அண்ணா! எங்கள் குடும்பம் எல்லாம் நடுரோட்டில் கிடப்பதா விஜய் அண்ணா! நீங்கள் மறந்தாலும் மேலும் மேலும் நீங்கள் உயர எங்களுடைய ஆத்மா வழி நடத்தும் விஜய் அண்ணா!. இவ்வாறு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

விபத்தில் இறந்தவர்களின் ஆத்மாக்கள் பேசுவது போல 8 முறை விஜய் அண்ணா! என்று கேள்வி எழுப்பி ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களையும் கண்

கலங்க வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ மற்றும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.