Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

நம் எண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை!

நமது எண்ணங்கள் நம் உடலின் ரசாயன அமைப்பையே மாற்றும் வல்லமை படைத்தவை. எண்ணங்கள்தான் உணர்ச்சியாக மாறி உடலின் சக்தியாக மாறுகின்றன. மனிதனின் எண்ணம் நம்பிக்கையாக வேர்விடும்போது அசாதாரண சக்தி பெறுகிறது. அந்த சக்தி எதை சாதிக்க விரும்புகிறதோ அதை சாதிக்கிறது. எண்ணங்களை நாம் உபயோகிக்க முடியுமா? என்றால், முடியும் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

எமிலிகூ என்கிற பிரெஞ்சு மன நோய் நிபுணர் இருந்தார்.நீ நன்றாக இருக்கிறாய்,உன் உடல் குணமடைகிறது. முன்னைப் போல் ஓடுகிறாய், விளையாடுகிறாய் என்று சொல்வதன் மூலம் பல நோய்களை அவர் குணப்படுத்தினார். நமக்கு நாமே எண்ணங்களைச் சொல்லிக்கொள்வதன் மூலம் நாம் வளரமுடியும், முன்னேற முடியும் என்று காட்டியிருக்கிறார் அவர்.திட்டப்படி நான் ஒவ்வொரு நாளும் எல்லா வகையிலும் முன்னைவிடச் சிறந்து வருவதை உணர்கிறேன் என்று தினமும் படுக்கப் போகும்போது நம் மனதிற்குள் சொல்லிக் கொள்வதாகும். இந்த வார்த்தைகளை உண்மையிலேயே உணர்வூபூர்வமாக அனுபவித்துச் சொல்லும்போது தான் பலன் ஏற்படுகிறது.வெறும் எந்திரம் போல் ஒப்புவிப்பது ஒரு பலனையும் தருவதில்லை. எண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை, நினைத்ததை முடிப்பவை, தன்னுடைய எண்ணங்களை செயல்படுத்தி தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து சாதித்த ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகிறேன்.

தற்போதைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களின் முக்கிய பொழுதுபோக்காக காணப்படுவது இன்ஸ்டாகிராம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால், இந்த தலைமுறை இளைஞர்கள் உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள்... ஆனால் இன்ஸ்டாகிராம் இல்லாமல் இருக்கமாட்டார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை.

விடுமுறை தினங்களில் வெளியே செல்வது, டிவி பார்ப்பது போன்ற எந்த பொழுதுபோக்கையும் செய்யாமல், நாள் முழுவதும் கணினி அல்லது செல்போன் முன் உட்கார்ந்தபடியே நேரத்தை போக்க முடியும் என்றால் அதற்கு ஒரே காரணம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்றவை தான்.இவற்றின் CEO மார்க் ஜுக்கர்பெர்க்கின் வெற்றிக் கதை பற்றித்தான் நாம் பார்க்க உள்ளோம்.

மார்க் ஜுக்கர்பெர்க் மே 14, 1984ஆம் ஆண்டு டாப்ஸ் ஃபெர்ரியில் பிறந்தார். அவரது பெற்றோர், எட்வர்ட் ஜுக்கர்பெர்க், ஒரு பல் மருத்துவர் மற்றும் அவரது தாயார், கரேன் ஜுக்கர்பெர்க், ஒரு மனநல மருத்துவர். மார்க் ஆரம்ப கட்டத்தில் கணினி நிரலாக்கத்தில் ஆர்வம் காட்டினார். அவரது தந்தை அவருக்கு கம்ப்யூட்டரின் அடிப்படைத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தார். பின்னர் தனது மகனுக்கு பாடம் கற்பிக்க டெவலப்பர் டேவிட் நியூமனை நியமித்தார்.

கம்ப்யூட்டர் சார்ந்த அறிவு விஷயத்தில் மார்க்கை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. ஃபேஸ்புக் 2004ஆம் ஆண்டு, பிப்ரவரி 4 ஆம் தேதி, தனது பல்கலைக்கழக விடுதி அறையில் தங்கியிருந்த நண்பர்களுடன் படிக்கும் போது தொடங்கப்பட்டது. அவர் நடுநிலைப் பள்ளியில் படிக்கும்போது கம்ப்யூட்டர் நிரலாக்கத் தொடங்கினார். அப்போதிருந்து, அவர் கணினி நிரல்களை உருவாக்கும் நோக்கத்தில் முழுக் கவனம் செலுத்தினார். இதையடுத்து, ஃபேஸ்புக் மார்க்கை 2008ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கொண்டு சேர்த்தது. 2009ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கை 350 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தினர். ஃபேஸ்புக்கினால் அபார வளர்ச்சி அடைந்த மார்க் மிக விரைவில் வளர்ந்து உலகின் டாப் 10 பணக்காரர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். இந்நிலையில் 2012ஆம் ஆண்டு நிறுவனர் மார்க் அப்போது வளர்ந்து கொண்டிருந்த இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தை 1 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது பலரையும் புருவத்தை உயர்த்தியது.

பிரபலமாகாத வெறும் 3 கோடி பயனர்களை மட்டுமே கொண்டிருந்த ஒரு சமூக வலைத்தளத்தை மார்க் போன்ற ஒருவர் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்குவது எவ்விதத்தில் அவருக்கு லாபம் தரும் என்பதே சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருந்த பலரது கேள்வியாக இருந்தது.அப்போது இன்ஸ்டாகிராமில் பணியாற்றிய மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 13 மட்டுமே. ஆனால், காலத்தை கொஞ்சம் வேகமாக ஓட்டிப் பார்த்தால், அன்று மார்க்கின் தொலைநோக்குப் பார்வையால் இன்று இன்ஸ்டாகிராமின் நிகர மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்திருக்கிறது என்பதை அறியலாம். வரலாற்றில் மிகவும் லாபகரமான ஒரு நகர்வாக இது பார்க்கப்படுகிறது.2012 வாக்கில் உலக அளவில் நம்பர் ஒன் சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் கோலோச்சிக் கொண்டிருந்தது. அப்போது ஸ்மார்ட்போன்கள் பெரியளவில் பிரபலமாகாத கட்டத்தில் பெரும்பாலானோர் கணினி வாயிலாகவே ஃபேஸ்புக்கை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அப்படியான ஒரு சூழலில், டிஜிட்டல் உலகின் அடுத்தக்கட்டம் என்பது முழுக்க முழுக்க செல்போன் வாயிலாகத்தான் இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்தார் மார்க்.

ஸ்மார்ட்போன்களின் வருகை, இனி மெல்ல கணினி பயன்பாட்டை பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதை உணர்ந்த அவர்,அதற்கு சரியான தளம் இன்ஸ்டாகிராம் என்பதை புரிந்துகொண்டார். அந்தக் காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் ஃபேஸ்புக், ட்விட்டரை விட மிகக் குறைந்த வருவாயை ஈட்டிக் கொண்டிருந்தாலும், இன்ஸ்டாகிராமில் பயனர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. மேலும், அதன் எளிமையான பயன்பாடும், பயனர் உள்ளீடுகளும் அவரை கவர்ந்தன.மார்க்கை பொறுத்தவரை இன்ஸ்டாகிராமை வாங்குவது என்பது பத்தோடு பதினொன்றாக ஒரு செயலியை கையகப்படுத்துவதல்ல. அது தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கின் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்தவதாக இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் ஃபேஸ்புக் தளத்துக்கு கடும் போட்டியாக விளங்கிய ட்விட்டர் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளோடு தொடர்ந்து ஈடுகொடுத்து ஓடவேண்டும் என்றால் இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக்கோடு இணைக்க வேண்டியது கட்டாயமானது. இப்படியாக இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக்குடன் இணைக்கப்பட்டு, ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் தளமாக மாற்றப்பட்டதும், இளம் தலைமுறை பயனர்களின் எண்ணிக்கையும் கூடியது. மேலும், பயனர்களுக்கு வருவாய் பெற்றுத்தரும் அம்சங்களும் அதிகம் பேரை ஈர்த்தது. எனவேதான் இன்ஸ்டாகிராமை வாங்கும் மார்க்கின் முடிவு மிகச் சிறந்த வியாபார உத்தியாக போற்றப்படுகிறது.

இன்று இன்ஸ்டாகிராம் என்பது வெறும் சமூக வலைத்தள ஜாம்பவான் மட்டுமின்றி, ‘மெட்டா’ நிறுவனத்தின் அதிக வருவாய் ஈட்டும் ஒரு தளமாகவும் விளங்குகிறது.உலகம் முழுவதும் 200 கோடி பயனர்களைக் கொண்டுள்ள இத்தளம், சமூக ஊடக அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறியிருக்கிறது. இன்று இன்ஸ்டாகிராமின் மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. இது மெட்டாவின் சந்தை மதிப்பான 1.47 டிரில்லியன் டாலரில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும்.

லாபம் ஒருபுறமென்றால், இன்னொருபுறம் எதிர்கால ‘டிரெண்டை’ கணித்து அதற்கேற்ப துணிச்சலுடன் தன்னுடைய முதலீடுகளை செய்யும் மார்க்கின் திறன்மிகு ஆளுமையும், தொலைநோக்குப் பார்வையும் இதை உறுதி செய்துள்ளது.எண்ணங்களின் கூட்டுத்தொகுப்பு நம்பிக்கையாகவும், உழைப்பாகவும் மாறி ஆளுமை மிக்கவர்கள் என்று ஒளி விடுவதை உலகில் காண்கின்றோம்.அத்தகையோரால் உலக சரித்திரமே மாற்றி எழுதப்படுகிறது.ஆம்! எண்ணங்கள் உலகை ஆள்கின்றன.