சென்னை: “நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி” திட்டத்தின் வாயிலாக நன்கொடைகளை வசூலிக்க பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ள கருத்துக்கு பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: “நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி” திட்டத்தின் வாயிலாக நன்கொடைகளை வசூலிக்க பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுவதாக முன் வைக்கப்பட்டுள்ள எவ்வித அடிப்படையில்லா குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக மறுக்கிறது. சமூகப் பங்களிப்பு மற்றும் நிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் மற்றும் செயல்பாட்டையே இக்குற்றச்சாட்டுகள் சிதைக்கின்றன.
நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி, நிறுவனங்கள் சட்டம் பிரிவு 8-இன் கீழ் (இலாப நோக்கமின்றி அறிவியல், கலை, கல்வி, சமூக நலன் போன்றத் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள்) தமிழ்நாட்டு அரசினால் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளின் கல்விச் சூழலையும் கட்டமைப்புகளையும் மேம்படுத்த தன்னார்வ பங்களிப்புகள் மற்றும் நிறுவன சமூகப் பொறுப்பு நிதியளிப்புகள் ஆகியவற்றை முறைப்படுத்தும் நோக்கத்துடன் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறைக் கொண்டு பங்களிக்க விரும்பும் தொழில் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தனி நபர்கள் ஆகியோரின் மீதே இத்திட்டத்தின் முழுக் கவனமும் பதிந்துள்ளது.
முக்கியமாக, எந்த ஒரு அரசு அலுவலரோ, தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ எவ்வித நிதியையும் பெற நியமிக்கப்படவோ அதிகாரமளிக்கப்படவோ இல்லை. மாறாக, பள்ளி மேலாண்மைக் குழுவுடன் கலந்தாலோசித்து தங்கள் பள்ளியின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை பள்ளிக் கல்வித் துறையின் பெற்றோர் செயலியில் பதிவிடும் நிர்வாகப் பணியினைச் செய்வது மட்டுமே அவர்களின் பங்காக இருக்கிறது. அவ்வாறுப் பதிவிடப்பட்டத் தேவைகள், என்எஸ்என்ஓபி தளத்தின் ஊடாக தன்னார்வத்துடன் அளிக்கப்பட்டுள்ள பங்களிப்புகளின் மூலம் தீர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
மேலும், என்எஸ்என்ஓபி தளத்தில் பதியப்படும் பங்களிப்புகள் ஒவ்வொன்றுமே தன்னார்வத்துடன் பதியப்பட்டதாகவும் வெளிப்படைத் தன்மைக் கொண்டதாகவும், பள்ளிகளின் தேவைகளான ஸ்மார்ட் வகுப்பறைகள், மற்றும் ஹை-டெக் லாப்கள், சுகாதார வசதிகள் மற்றும் வகுப்பறை சீரமைத்தல் போன்றவற்றை நிறைவேற்றவே பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளன. இத்தளத்தில் பதிவு செய்துள்ள பல நன்கொடையாளர்கள் தாமே நேரடியாக குறிப்பிட்டப் பள்ளிக்கு செயல்முறையில் பங்களிக்கவும் முன்வருகின்றனர். இதன் மூலம் இந்த பங்களிப்பின் நம்பகத் தன்மையும் வீச்சும் அதிகரிக்கின்றது. இத்திட்டத்துடன் தொடர்புடைய நிதி இலக்குகளோ, காலக்கெடுகளோ, நிதித்திரட்டல் ஒதுக்கீடுகளோ எந்த அதிகாரிக்கும் அல்லது நிறுவனத்திற்கும் நிர்ணயிக்கப்படவில்லை.
இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை, 885 நிறுவனங்கள் (தொழில்துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை) மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட தனிநபர்கள், இவர்களில் பலர் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் பெருமைமிக்க முன்னாள் மாணவர்களாகும், தன்னார்வத்துடன் சுமார் ₹860 கோடி ரூபாயை பள்ளிகளின் மேம்பாட்டிற்காக வழங்கியுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் ஆண்டு தோறும் தொடர்ந்து இந்தத் திட்டத்துக்கு ஆதரவு அளித்து வருவது என்பது, இத்திட்டத்தின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மை மீது ஏற்பட்டுள்ள சமூக நம்பிக்கையின் உறுதியான சான்றாகும்.
பள்ளிக் கல்வித் துறைக்கான அரசு நிதி ஒதுக்கீடு போதுமான அளவு இல்லை என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு 43.5% உயர்ந்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் ₹32,599.54 கோடியாக இருந்தது, 2025-26 ஆம் ஆண்டில் ₹46,767 கோடியாக உயர்ந்துள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு மற்றும் சமூகப் பங்களிப்பின் ஊடான வளர்ச்சி ஆகிய இரண்டின் அடிப்படையிலும் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது காட்டுகிறது.
‘நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி’ திட்டம் என்பது அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கு மாற்று அல்ல. மாறாக, சமூகங்களையும், நிறுவனங்களையும் முன்னாள் மாணவர்களையும் அவர்கள் அக்கறைக் கொண்டுள்ள பள்ளிகளுடன் இணைக்கும் பாலமாக செயல்படும் ஒரு கூட்டு முயற்சிக்கான முன்மாதிரித் திட்டமாகும். இது அழுத்தத்தின் அடையாளம் அல்ல, இணைப்பின் சின்னம்; சுரண்டலின் குறியீடு அல்ல, அதிகாரப்படுத்துதலின் வெளிப்பாடு ஆகும். இத்திட்டம் அடையாளப்படுத்தும் கூட்டு பொறுப்புணர்வு மற்றும் வளர்ச்சியை சிதைக்கும் வகையில் பரப்பப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளினை ஒதுக்கி, உறுதி செய்யப்பட்ட மற்றும் நம்பகமான தகவல்களை மட்டுமே நம்புமாறு இத்திட்டத்தின் அனைத்துப் பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்களையும் பள்ளிக் கல்வித் துறை உறுதியாகக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
