இந்திய ரயில்வேயில் புதிய முன்பதிவு முறை; இனி கவுன்டரில் தட்கல் டிக்கெட்டுக்கு ஓடிபி அவசியம்: அடுத்த சில நாட்களில் அறிமுகமாகிறது
சென்னை: இனி கவுன்டரில் தட்கல் டிக்கெட்டுக்கு ஓடிபி அவசியமாகிறது. இனி ரயில்வே முன்பதிவு கவுன்டர்களில் தட்கல் டிக்கெட் எடுக்க பயணிகள் தங்கள் மொபைல் போனில் வரும் ஒரு முறை கடவுச்சொல்லை கொடுக்க வேண்டும். கடைசி நேர டிக்கெட் முன்பதிவு வசதியின் தவறான பயன்பாட்டை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நவம்பர் 17ம் தேதி முதல் கவுன்டர்களில் முன்பதிவு செய்யப்படும் பயணங்களுக்கு ஓடிபி அடிப்படையிலான தட்கல் டிக்கெட் முறையை ரயில்வே அமைச்சகம் சோதனை அடிப்படையில் தொடங்கியது. முதலில் சில ரயில்களில் மட்டும் இது அமல்படுத்தப்பட்டது. விரைவிலேயே 52 ரயில்களாக அதிகரிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் மீதமுள்ள எல்லா ரயில்களுக்கும் கவுன்டர்களில் இந்த முன்பதிவு முறை அமல்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாதாரண பயனர்களுக்கு கடைசி நேர டிக்கெட் முன்பதிவு வசதியை மேலும் வசதியானதாக மாற்றவே ஓடிபி அடிப்படையிலான தட்கல் முன்பதிவு முறை முன்மொழியப்பட்டது என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த முறையின் கீழ், முன்பதிவு கவுன்டரில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, முன்பதிவு படிவத்தில் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு பயணிக்கு ஓடிபி அனுப்பப்படும். ஓடிபி சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்த பின்னரே டிக்கெட் உறுதி செய்யப்படும் என அமைச்சகம் கூறியுள்ளது. தட்கல் வசதியின் தவறான பயன்பாட்டை தடுப்பதும், அதிக தேவை உள்ள டிக்கெட்டுகளுக்கு உண்மையான பயணிகளுக்கு சிறந்த அணுகல் இருப்பதை உறுதி செய்வதும் இந்த முயற்சியின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே டிக்கெட் முறையில் வெளிப்படைத்தன்மை, பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும் என தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களில், பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவுகளில் நியாயமான அணுகலை வழங்கவும், முன்பதிவு முகவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக இந்த முறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் ரயில்வே அமைச்சகம் சில நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது. ஜூலை மாதம், நாடு முழுவதும் தட்கல் முறையின் கீழ் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஓடிபி மூலம் ஆதார் சரிபார்ப்பை ரயில்வே அமைச்சகம் கட்டாயமாக்கியது. அக்டோபர் முதல் தேதி முதல், எந்த ரயிலுக்கும் முன்பதிவு தொடங்கிய பின் முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் ஒதுக்கப்பட்ட பொதுவான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தது.

