புதுடெல்லி: டிஜிட்டல் மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய விதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது மொபெல் வாலெட், யுபிஐ, நெட் பேங்கிங்க், டெபிட், கிரெடிட் கார்டு என பல்வேறு வகையில் பணப்பரிமாற்றங்களை செய்து வருகிறோம். இவை அனைத்துக்கும் ஒரு முறை கடவுச்சொல்(ஓடிபி) என்ற எண் பாதுகாப்பாக உள்ளது. இந்த ஓடிபி எண் மோசடிகளில் இருந்து நம் பணத்தை பாதுகாக்க உதவுகிறது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகளை வௌியிட்டுள்ளது. புதிய விதியின்படி, டிஜிட்டல் மூலம் நாம் செய்யும் அனைத்துவித பணப்பரிவர்த்தனைகளுக்கும் இரண்டு முறை சரிபார்ப்பு(Two Factor Authentication) என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதாவது, வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்யும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை வைத்து மட்டும் பரிவர்த்தனை செய்ய முடியாது. அத்துடன், நாம் உருவாக்கிய பாஸ்வேர்ட், பின் நம்பர், டோக்கன் எண், கை விரல் ரேகை போன்ற பயோமெட்ரிக் தரவுகளில் ஏதேனும் ஒன்றையும் வைத்து பணப்பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பு பணப்பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க உதவும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.