சென்னை: OTA நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்தில் புதிய நுழைவுவாயில் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், OTA நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்தில், சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் (OTA) அருகே புதிய நுழைவு / வெளியேறும் அமைப்பை கட்டுவதற்கான ஒப்பந்த்தை Sri Radha Constructions நிறுவனத்திற்கு ரூ.8.52 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) கடந்த ஜூலை 30ம் தேதி வழங்கப்பட்டது. இதுவரை நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்திற்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே இருந்தது.
இப்போது கட்டப்படும் இந்த கூடுதல் நுழைவுவாயில், ஜி.எஸ்.டி சாலையின் இரு புறங்களிலும் நிலையத்தை எளிதாக அணுகுவதுற்கான வசதியை வழங்கும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் தலைமை பொது மேலாளர் டி. லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), Sri Radha Constructions நிறுவனத்தின் சார்பில் எஸ். வினோத் ராகவேந்திரன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் டி. ஜெபசெல்வின் க்ளாட்சன் (ஒப்பந்தம் கொள்முதல் மற்றும் மேலாண்மை), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த புதிய வசதி, குறிப்பாக நெரிசல்மிகுந்த நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதோடு, அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் வர்த்தக பகுதிகளுக்கு தடையற்ற இணைப்பை ஏற்படுத்தும். இதனால் தினசரி மெட்ரோ பயணிகள் பயன்பெறுவார்கள்.