சென்னை: ஓஆர்எஸ்எல், ஓஆர்எஸ்எல் பிளஸ் என பெயர் அச்சிட்டு மருந்தகத்தில் விற்பனை செய்ய சுகாதாரத் துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஓஆர்எஸ் என்ற பெயரில் பானங்களை அனுமதியின்றி விற்பனை செய்ய ஒன்றிய அரசு கடந்த வாரம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், ஓஆர்எஸ் என்ற பெயரில் போலி பானங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டங்களில் உள்ள மருந்தகம் உள்ளிட்டவற்றில் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கும் சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓஆர்எஸ்எல், ஓஆர்எஸ்எல் பிளஸ், ஓஆர்எஸ் ஃபிட் என்ற பெயர்களில் பானங்களை மருந்தகங்களில் விற்பனை செய்யக் கூடாது என்று சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. மேலும், உலக பொது சுகாதார நிறுவனத்தால் வழங்கப்படும் அங்கீகாரம் அச்சிடப்பட்ட ஓஆர்எஸ் மட்டுமே விற்பனை செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஓஆர்எஸ்எல் என்று பெரிய கொட்டை எழுத்துகளில் அச்சிடப்பட்ட போலியான பானங்கள் பல்வேறு வண்ண நிற பெட்டிகளில் விற்பனையாகி வந்தது. அதில், கடைசியாகக் கீழே, இவை ஓஆர்எஸ் இல்லை என்று அச்சிடப்பட்டிருப்பதையும் காண முடியும்.
 
  
  
  
   
