உடலுறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்களை எழுத வரும் 30ம் தேதி ‘மதிப்புச்சுவர்’ திறப்பு: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடக்கம்
சென்னை: சென்னை சைதாப்பேட்டை கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு ஜோன்ஸ் சாலைப் பகுதியில் உள்ள மயான பூமியின் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உடலுறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அரசு மரியாதை என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் இதுவரை 513 கொடையாளர்கள் உடலுறுப்பு தானம் வழங்கி இருக்கிறார்கள்.
மேலும் அவர்களை சிறப்பிக்கும் வகையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வரும் 30ம் தேதி மதிப்புச்சுவர் (wall of honor) என இதுவரை மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்களை கல்வெட்டில் பதிய வைக்கும் பணி நிறைவுற்று திறந்து வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்கள் அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள சுவர்களில் நிலைத்திருக்கும்.