Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரம் தரும் மாநில அளவிலான குழு மறுசீரமைப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரம் தரும் மாநில அளவிலான குழுவை மறுசீரமைப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கை:

உறுப்பு மாற்றுக்கு அனுமதி அளிக்கும் மாநில அங்கீகார குழுவை மறுசீரமைக்க வேண்டும் என தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் அளித்த கருத்துருவை, அரசு தீவிரமாகப் பரிசீலித்தது. அதன்படி, உறுப்பு மாற்றத்துக்கு அனுமதி அளிக்கும் மாநில அங்கீகாரக் குழுவை மறு சீரமைத்தும், அதற்கான விண்ணப்ப கட்டணத்தை உயர்த்தியும் அரசு உத்தரவிட்டுள்ளது. உறுப்பு மாற்றத்துக்கு அனுமதி அளிக்க தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் தலைமையில் 7 பேர் கொண்ட மாநில அங்கீகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள் பதிவு செய்யப்பட்ட ஆஸ்பத்திரிகளில் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் வெளிநாட்டவரின் விண்ணப்பத்தை மாநில அங்கீகாரக் குழு பரிசீலித்து, அந்த விண்ணப்பத்திற்கு அனுமதி அளிக்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்யும்.

அதுபோல இந்தியாவிற்குள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பு மாற்றுக்காக விண்ணப்பிக்கும் மனுக்களையும் இந்த குழு பரிசீலித்து முடிவெடுக்கும். வடக்கு, மத்திய, மேற்கு, தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட அளவிலான அங்கீகாரக் குழுவை மாநில அங்கீகாரக் குழு கண்காணிக்கும். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆஸ்பத்திரிகளில் மட்டும் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக விண்ணப்பிக்க முடியும். உறுப்பு மாற்று சிகிச்சைக்காக விண்ணப்பிக்கும்போது, என்ன நோக்கத்திற்காக இந்த சிகிச்சை செய்யப்படுகிறது என்பதை உறுப்பு தானம் அளிப்பவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் தொலைபேசியிலும், நேரிலும் அங்கீகாரக் குழு விசாரிக்க வேண்டும். பணத்துக்காகவோ அல்லது வற்புறுத்தலின் பேரிலோ உறுப்பு தானம் செய்ய முன்வரவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உறுப்பு மாற்று சிகிச்சைக்கான அனைத்து விண்ணப்பங்களும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறைகள், வழிகாட்டுதல்களின்படி இருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டும். மாவட்ட அங்கீகாரக் குழுக்களின் செயல்பாடுகளை மாநில அங்கீகாரக் குழு முழுமையாக கண்காணிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் தலா ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. இதில் ரூ.1,000 அரசு கணக்கில் செலுத்தப்படும். மீதமுள்ள ரூ.1,000 மாநில, மாவட்ட அங்கீகாரக் குழுக்களின் நிர்வாகச் செலவுக்காகவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஈரோடு மாவட்டம், நாமக்கல் மாவட்டத்தில் குறிப்பாக பள்ளிபாளையத்தில் முறைகேடாக கிட்னி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மேற்கண்ட வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.