உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் பெயர்கள் பொறித்த தியாகச் சுவர் : அமைச்சர்கள் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர்!!
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் எந்த ஒன்றையும் சொல்வதற்கு முன்னால் தாமே செய்து காட்டும் மிகச்சிறந்த மானுடப் பண்புபில் உயர்ந்தவர். அந்த வகையில் முதலமைச்சர் அவர்கள் 2009 ஆம் ஆண்டே உடல் தானம் செய்துள்ளார் என்பது நாம் எல்லாம் நினைந்து பெருமைப்பட தக்க வரலாற்று நிகழ்வாகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவரது துணைவியார் திருமதி துர்க்கா ஸ்டாலின் அம்மையார் அவர்களும், 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 28 ஆம் நாள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு விழாவுக்காகச் சென்றிருந்தார்கள். அந்த விழா நிகழ்ச்சியின் இடையே இருவரும் தங்களுடைய வாழ்நாள் இறுதியில் உடல் தானம் வழங்குவதற்கான உறுதிமொழிப்படிவத்தில் கையெழுத்திட்டார்கள். அந்த மகத்தான நிகழ்வு அப்போது மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் அவர்கள் இருவருக்கும் பெற்றுத் தந்தது.
அன்றைய நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், "உடல் உறுப்புகளைத் தானம் செய்வது இன்று நேற்றல்ல கடந்த கால வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. மன்னர்கள், நாயன்மார்கள் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர். கண்ணப்ப நாயனார் தனது இரண்டு கண்களையும் தானமாக வழங்கியதாகப் புராணம் கூறுகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக ஒருவர் உடலில் உள்ள உறுப்புகளை எடுத்து வேறு ஒருவருக்குப் பொருத்தி உயிர் வாழ வைக்கும் சம்பவங்கள் பெருகி வருகின்றன" என்று குறிப்பிட்டார்கள்.
சேர்ந்த "2008 செப்டம்பர் மாதம் திருக்கழுக்குன்றத்தைச் ஹிதேந்திரனுக்கு சாலை விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டது. அவரது இதயம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெங்களூருவில் உள்ள ஒரு சிறுமிக்கு பொருத்தப்பட்டது. சென்னை மருத்துவர்களின் இந்த சாதனையை மறக்க முடியாது. அவரது பெற்றோரின் நற்செயலை நான் நேரில் அவர்களது வீட்டுக்குச் சென்று பாராட்டினேன். அவரது பெற்றோருக்குச் சுதந்திர தினவிழாவில் விருது வழங்கி அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிறப்பித்தார்கள் என்று குறிப்பிட்டார்கள்.
உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு -அரசு மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உடலுறுப்பு தானம் செய்பவர்களைப் பாராட்டும் வகையில், கடந்த 2023 செப்டம்பர் திங்கள் 23 ஆம் தேதி உடலுறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்தார்கள். அந்தவகையில் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் திருவுடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற மாவட்ட அளவிலான அலுவலர்கள் அரசு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபிறகு இதுவரை 253 பேர் உடலுறுப்பு தானம் செய்து, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இரண்டு ஆண்டுகளில் மட்டும் இவ்வளவு பேர் உடலுறுப்பு தானம் செய்திருப்பது என்பது இந்திய அளவில் தமிழ்நாடுதான் இன்றைக்கு முதலிடத்தில் இருக்கின்றது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்ததற்குப் பிறகு இந்திய அளவில் தமிழ்நாடு இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசின் பல விருதுகளை ஆண்டு தோறும் பெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டும் கூட அதிக அளவில் உடலுறுப்பு தானம் செய்தவர்கள் என்கின்ற வகையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்தது. இந்த திட்டம் அறிவித்தபிறகு இதுவரை உடலுறுப்பு தானம் பதிவு செய்திருப்பவர்கள் 23,189 பேர். இப்படி இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் இந்த சிறப்புக்குரிய திட்டத்திற்கு மேலும் நிறைவேற்றுகின்ற வகையில் தியாகச் சுவர் (wall of honour) நிறுவப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் இதுபோல் நிறுவப்படவிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்தத் தியாகத்தைப் போற்றும் மகத்தான தியாகச் சுவர் நிறுவப்பட்டு. இன்று (7.11.2025) சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களும், இந்து அறநிலையங்கள் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்களும் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.சாந்தாராமன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மரு.கோபாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் திரு.கார்த்திகேயன், செயற்பொறியாளர் திரு.அழகிரிசாமி, மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் உயரலுவலர்கள் உடனிருந்தனர்.

