* 4 டிராக்டர்களில் கொண்டு வந்தனர்
* மதுரையில் தாய்மாமன்கள் அசத்தல்
திருப்பரங்குன்றம்: மதுரையில் குழந்தைகளின் காதணி விழாவிற்கு ரூ.2 கோடி மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கி தாய்மாமன்கள் அசத்தினர். மதுரை புதுக்குளம் பீட் முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ். காய்கறி வியாபாரி. இவரது மனைவி ரம்யா. அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது குழந்தைகள் ஆதேஷ் விக்ரம் (8), சாய்ஸ்ரீ (6). இவர்களது காதணி விழா முத்துப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவிற்கு ஆசிரியையின் சகோதரர்களான திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் ராஜபாண்டி ஆகியோர் தாய்மாமன் சீர்வரிசையாக நான்கு டிராக்டர்களில் மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழவகைகள், முந்திரி, பாதாம், பிஸ்தா, அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், 2 ஆட்டு கிடா ஆகியவற்றை ஊர்வலமாக மண்டபத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த ஊர்வலத்தில் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கட்டைக்கால் ஆட்டம், கதகளி, கேரள செண்டை மேளம் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், சீர்வரிசையில் மொய் பணமாக 50 பவுன் நகை, 22 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொடுக்கப்பட்டது. மேலும் 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளில் மாலை தயார் செய்து ரூ.10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டு மாலைகள் என மொத்தம் ரூ.2 கோடிக்கு சீர்வரிசை பொருட்கள் கொடுத்து அசத்தினர். குழந்தைகள் ஆதேஸ் விக்ரம், சாய்ஸ்ரீ இரு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர வைத்து வீதிகளில் சீர்வரிசைகளுடன் அழைத்து வரப்பட்ட சம்பவம் மதுரை மக்களை வியப்பில் ஆழ்த்தியது.