Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நம் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என இணைந்து தமிழக உரிமை போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுப்போம்: வீடியோ பதிவை வெளியிட்டு திமுக வேண்டுகோள்

சென்னை: தமிழர்களின் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைய வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், ஏஐ தொழில்நுட்பத்திலான வீடியோ ஒன்றை திமுக நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் தங்களது உரிமைக்காக ஓரணியில் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது. தாய் மண் என்பது ஒரு சொல் அல்ல. மக்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த ஒன்று. இந்த 21ம் நூற்றாண்டிலும் மண்ணுக்காக தமிழ்நாடு பல உரிமை போராட்டங்களை நிகழ்த்த வேண்டியதுள்ளது.

ஜிஎஸ்டி என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை தொகை இன்னும் தரப்படவில்லை. பேரிடர் நிவாரண நிதியும் கிடைக்கவில்லை. புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் கல்வி நிதி ரூ.2152 கோடி இன்னும் வந்து சேரவில்லை. நீட் என்னும் கொடிய தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகிறார்கள். நம் மண் மீது செலுத்தப்படும் இது போன்ற தொடர் அடக்குமுறைகளை தமிழ்நாட்டு மக்களாகிய நாம் ஒரணியில் இணைந்து தடைகளை தகர்த்தெறிவோம். தமிழ்நாட்டு வரலாற்றில் மொழிப்போர் தொடங்கி கீழடி வரை தாய் தமிழ் காக்க தமிழர்கள் நெஞ்சுரத்ேதாடு ஒன்றிணைந்து பல போராட்ட களங்களை கண்டுள்ளனர்.

இந்தி திணிப்பு, கீழடி ஆய்வுக்கு சர்வதேச ஆய்வகங்கள் அங்கீகாரம் அளித்தும், ஒன்றிய அரசு அங்கீகாரம் அளிக்காமல் இழுத்தடிப்பது. தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பின் தொன்மையை புறக்கணிப்பது, சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி அளித்து தமிழ் மொழிக்கு குறைந்த நிதி ஒதுக்குவது என ஒன்றிய பாஜ அரசு தமிழ் மொழி மீது தொடர்ந்து செலுத்தும் அடக்குமுறையை தமிழ்நாட்டு மக்களாகிய நாம் தகர்க்க வேண்டாமா. வீரத்துக்கு பெயர் பெற்ற நம் தமிழர்களின் மானம் அடிமை கூட்டத்தாலும், அவர்களின் எஜமானார்களாலும் சிதைக்கப்பட்டு வருகிறது.

தமிழர் அடையாளமான திருவள்ளுவருக்கு தொடர்ந்து காவி சாயம் பூசி இழிவு செய்யப்பட்டு வருகிறார்கள். மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கு விரோதமாக ஆளுநரை வைத்து தமிழ்நாட்டிற்கு எதிராக அர்ப்ப அரசியல் செய்யப்படுகிறது. தமிழர்களை நாகரீகமற்றவர்கள் என நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே ஒரு ஒன்றிய அமைச்சர் பேசுகிறார். இது போன்ற தொடர் தாக்குதலால் தமிழ்நாட்டு மக்களின் மானமும், சுயமரியாதையும் சீண்டிப்பார்க்கப்படுகிறது. சுயமரியாதை மிக்க தமிழ்நாட்டு மக்களை சில சதிகார கூட்டம் தொடர்ந்து அவமதிக்கும் போக்கை இனியும் ஏற்க முடியாது. நம் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் நம் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என இணைந்து தமிழ்நாட்டின் உரிமை போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுப்போம். ஓரணியில் தமிழ்நாடு என இணைவோம். பகைக்கூட்டத்தை வெல்வோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.