சென்னை: தமிழகத்தில் நேற்று ஒருசில இடங்களில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்துள்ளது. மேலும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று, கிழக்கு-தென்கிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதுபோல, குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது.
இது தமிழக கடலோரத்துக்கு நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். நாளையும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநிலை 14ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.