சென்னை: கடலோரத் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், ஒரு சில இடங்களில் இயல்பைவிட 1-2 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு கேரள கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று, கோவை, திருப்பூர் மாவ ட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நாளை திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.