சென்னை: வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. இருப்பினும், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 12ம் தேதியில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இதேநிலை 13ம் தேதியும் நீடிக்கும். அதனால் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டதுடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை மற்றும் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

