திருவனந்தபுரம்: கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மலையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரளா முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்தநிலையில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.அதேபோல் திருவனந்தபுரம், பாலக்காடு, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மலையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
