Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆர்கானிக் பொருட்கள் மீதான விழிப்புணர்வு வேண்டும்!!

தொழில் துவங்குவதற்காகவே பெங்களூர் போன்ற பெரு நகரத்திலிருந்து தமிழகத்திற்கு வந்து, வேலூரில் ஆக சிறந்த பெண் தொழில்முனைவோராக உருவெடுத்து அசத்தி வருகிறார் முப்பத்தியாறே வயதான அம்ரிதா ஜெயின். அவரது கணவர் எம்பிஏ முடித்து விட்டு பெங்களூரில் நல்ல பணியில் இருப்பவர். எம்பிஏ படித்த மனைவி அம்ரிதாவின் தொழிலதிபர் கனவிற்காகவே வேலூருக்கு வந்து குடியேறியிருக்கிறார் அவரது கணவர். தற்போது அம்ரிதா வேலூரில் இருந்தபடியே சிறிய தொழில் மையம் ஒன்றினை ஆரம்பித்து இந்தியா முழுவதும் தனது பொருட்களை விற்பனை செய்து வருகிறார். அம்ருதா தனது ஸ்கின்கேர் தயாரிப்பு பொருட்கள் குறித்தும் அதன் விற்பனை மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்காவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஒன்றில் ஆன்லைன் மூலமாக இரண்டு ஆண்டு படிப்பாக ‘‘ஸ்கின்கேர் பார்முலேஷன் கோர்ஸ்” முடித்து இருக்கிறேன். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனாகாலகட்டத்திற்கு பிறகு முழுநேரமாக ஸ்கின்கேர் பிராடக்ட்கள் தயாரித்து விற்பனை செய்ய துவங்கினேன். திருமணத்திற்கு பிறகும் இல்லத்தரசியாக தான் இருந்து வந்தேன். எனக்கு சிறுவயது முதலே சமூக கண்ணோட்டம் மற்றும் தொழில் ஆர்வம் அதிகமாக இருக்கும். நல்ல ஆரோக்கியமான தரமான பொருட்களை தயாரித்து அதனை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். 2019 ஆம் ஆண்டு இறுதியில் வீட்டிலிருந்தே ஸ்கிரீன் ப்ராடக்ட் தயாரித்து பயன்படுத்தி வந்தேன். அதனை எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அளிக்க அவர்களது வாய்மொழி விளம்பரத்தால் பலரும் அந்த பொருட்களை கேட்க துவங்கினர். அப்போது தான் இதற்கான முறையான பயிற்சிகள் எடுத்துக்கொண்டு முழுநேர தொழிலில் இறங்கும் ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. எனது கணவரும் முழு ஒத்துழைப்பினை அளிக்க ஸ்கின்கேர் பொருட்களை தயாரித்து அளிக்கும் பணியினை துவங்கினேன். தற்போது வரை எனது பொருட்களுக்கான வரவேற்பும் ஆதரவும் பெருக நல்ல முறையில் எனது பணிகள் சென்று கொண்டிருக்கிறது.

என்னென்ன வகை பொருட்களை தயாரித்து அளிக்கிறீர்கள்?

தற்போது நான் நாற்பது வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். அதில் முப்பது வகை பொருட்களை சேர்ந்த மாதிரியான ஐந்து வகை சோப்புகளை தயாரித்து அளிக்கிறேன். இதைத்தவிர தலைக்கானஆர்கானிக் ஷாம்பூ ஹேர்டை ஹேர் பேக் கண்டிஷ்னர் சீரம் போன்ற பல்வேறு ஹேர் கேர் பொருட்களை தயாரித்து வருகிறேன். பாடி லோஷன், ஸ்கிரப், பாடி க்ரீம் என எல்லா பொருட்களையும் தயாரிக்கிறோம். லிப் பாம் கூட செய்து தருகிறேன்.

உங்களது தயாரிப்புகளின் தனித்தன்மை என்ன?

சுத்தமான ஆர்கானிக் பொருட்களை உபயோகப்படுத்திதான் பொருட்கள் தயாரித்துத்தருகிறேன். மேலும் தேவைப்படும் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கி பயன்படுத்தி வருகிறேன். இயற்கை பொருட்களை உலர்ந்த சூரிய உலர்த்தி யின் மூலமாகவே செய்கிறேன். இதனால் பொருட்கள் சுத்தமாகவும் தூய்மையாகவும் இயற்கையாகவும் அதன் இயல்பு தன்மை மாறாமலும் மிக விரைவாகவும் உலர்த்த முடிகிறது. இதனால் எங்களது ‘‘ஆர்கனிக்கர்’’ பொருட்களின் தரமும் ஆயுட்காலமும் நீட்டித்து நிற்கிறது. மேலும் இயற்கையான எண்ணெய்கள் மற்றும் சியாபட்டர் போன்றவைகள் மட்டுமே எங்களது தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. செயற்கை ரசாயனங்கள் மற்றும் கெமிக்கல்ஸ்களை தவிர்க்கிறோம். இதனால் எங்களது பொருட்கள் ஒரு வருடம் மட்டுமே உபயோகிக்க முடியும். அவ்வப்போது ப்ரெஷ்ஷா வரும் ஆர்டர்களுக்கேற்ப மட்டுமே தயாரித்து தருகிறேன். எனது வாடிக்கையாளர்கள் பலர் தங்களது சரும பராமரிப்பு பிரச்சனைகளுக்காக என்னை அணுகுகிறார்கள். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதோடு அவர்களது சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடிய தரமான தயாரிப்புகளை பரிந்துரை செய்கிறேன். அதனால் எனது வாடிக்கையாளர்கள் பலரும் அதனை பயன்படுத்தி நற்பலன்களை பெறுகிறார்கள் என்பது எனக்கு நிறைய மனநிறைவையும், மனமகிழ்ச்சியையும் தருகிறது.

விற்பனை மற்றும் வாடிக்கையாளர்கள் குறித்து...

எங்களது தயாரிப்புகளுக்கான வரவேற்புகள் எல்லா இடங்களிலும் இருக்கிறது. வெளிநாடு செல்பவர்கள் உதாரணமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் எங்களது தயாரிப்பு பொருட்களுக்கு நல்லவிதமான ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு ஒரு கிளை நிறுவும் அளவிற்கு தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் கொரியர் மூலமாக பொருட்களை அனுப்பி வைக்கிறோம். தற்போது 100 க்கு மேற்பட்ட நிரந்தரமான தொடர்ந்த வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் அவ்வப்போது வாங்கி செல்கிறார்கள். விற்பனைகள் சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மூலமாகவும் விற்பனை செய்கிறோம். வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகவும் நிறைய ஆர்டர்கள் கிடைக்கிறது. தற்போது இ- காமர்ஸ் தளங்களின் மூலமாக பொருட்களை விற்பனை செய்ய பேசி வருகிறேன்.

உங்களது தயாரிப்பு தொழில் மையம் குறித்து சொல்லுங்கள்?

முதலில் நான் மட்டுமே பொருட்களை தயாரித்து அளித்து வந்தேன். அதன்பிறகு வேலூரில் தனி சிறு தொழில் மையம் அமைத்து தான் பொருட்களை தயாரித்து வருகிறேன். தற்போது என்னிடம் ஐந்து பேர் வேலை செய்து வருகின்றனர். வேலூரில் நாங்கள் தொழில் துவங்க இங்கு மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்கிறது என்பதும் ஒரு முக்கிய காரணம். எதிர்காலத்தில் நிறைய பேருக்கு வேலை தரவேண்டும் என்கிற எண்ணங்கள் இருக்கிறது. எனது உதவியாளர்களுக்கு கூட முறையாக பயிற்சி கொடுத்தே வேலை கொடுத்து வருகிறேன். அதே போன்று நிறைய கிளைகளை வேவ்வேறு ஊர்களில் ஏற்படுத்த வேண்டும் என்கிற கனவுகள் இருக்கிறது. நிறைய பிரான்ஸஸில் கூட கொடுக்க முயற்சித்து வருகிறேன். நிறைய தொழில் முனைவோர் பெண்களை உருவாக்க வேண்டும் என்கிற ஆசைகளும் கனவுகளும் இருக்கிறது.

எனக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இன்று வரை எனது தொழில் ஆர்வத்திற்கு முழு ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் அளித்து வருவது எனது கணவர் தான். இதற்காக பெங்களூரில் வுமன் பிராண்ட் அவார்ட் என்கிற விருதினை வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் மென்மேலும் வளர வேண்டும் என்கிற தீராத ஆர்வமும் கடும் உழைப்பும் என்னையும் எனது தொழிலையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என நம்புகிறேன். முக்கியமாக ஆர்கானிக் பொருட்கள் குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். நாம் பயன்படுத்தும் பொருட்கள் தரமானது தானா?ஆரோக்கியமான ஒன்று தானா? என்று வாடிக்கையாளர்கள் சிந்திக்க வேண்டும். இன்றைய நவீன காலகட்டத்தில் தொழில் துவங்க விரும்பும் பெண்களுக்கு முறையான பயிற்சியும், நல்ல திட்டமிடலும் கொஞ்சம் முதலீடும், நிறைய ஆர்வமும் இருந்தாலே போதும். இத்துறையில் பெண்களுக்கு ஏராளமான நல்ல நல்ல வாய்ப்புகள் இருக்கிறது என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் அம்ரிதா ஜெயின்.

- தனுஜா ஜெயராமன்