Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

6 வகை கீரை... பல வகை காய்கறி... அத்தனையும் ஆர்கானிக்!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வட்டாரத்திற்கு உட்பட்ட ஒரு கிராமம் குப்பம்கண்டிகை. சுமார் 400 வீடுகளுக்கு மேல் உள்ள இந்த கிராமத்தின் பிரதான தொழில் விவசாயம்தான். விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் சாகுபடி செய்கிறார்கள். நிலம் இல்லாதவர்கள் அந்த ஊரில் விளைகிற பொருட்களை வாங்கிச்சென்று சுற்றுப்புறங்களில் உள்ள ஊர்களில் விற்பனை செய்கிறார்கள். நெல் சாகுபடிக்கு 80 சதவீதம் முக்கியத்துவம் தரும் இந்த ஊர் மக்கள், அதற்கடுத்தபடியாக கீரை மற்றும் காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். இதில் வருடம் முழுவதும் கீரை மற்றும் காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்து வாரந்தோறும் லாபம் பார்க்கும் விவசாயியாக விளங்குகிறார் இந்த ஊரைச் சேர்ந்த ஏ.சண்முகம். குப்பம்கண்டிகை ஊராட்சியின் முன்னாள் தலைவரான இவர் கடந்த ஐந்து வருடங்களாக ரசாயனக் கலப்பு இல்லாமல் ஆர்கானிக் முறையில் விவசாயம் பார்த்து வருகிறார். தற்போது ஆறு வகையான கீரை மற்றும் பலவகையான காய்கறிகளைப் பயிரிட்டு இருக்கிறார். இவரது விவசாய முறை குறித்து அறிய குப்பம்கண்டிகைக்கு சென்றோம். அறுவடைப் பணியில் பிசியாக இருந்தபோதும் நம்மை வரவேற்று பேசத் தொடங்கினார்.

`` பிளஸ் - 2 வரை தான் படித்திருக்கிறேன். பள்ளிக்குச் செல்லும்போதும் சரி, பள்ளிப்படிப்பு முடிந்தும் சரி விவசாயம் எனக்கு நல்ல பரிச்சயம். தாத்தா அப்பா காலத்தில் இருந்தே விவசாயம் பார்த்து வருவதால் விவசாய வேலைகள் நன்றாக தெரியும். எங்களுக்குச் சொந்தமாக ஆறு ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில் இரண்டு ஏக்கரில் நெல் பயிரிடுவேன். மீதமுள்ள 4 ஏக்கரில் காய்கறியையும் கீரையையும் மாற்றி மாற்றி பயிரிடுவேன். அதாவது ஒவ்வொரு காய்கறி, கீரைகளுக்கு 15 சென்ட் என ஒதுக்கி, 2 ஏக்கர் முழுக்க பயிரிடுவேன். அந்தப் பயிர்களில் அறுவடை முடியும் தருவாயில் அடுத்த 2 ஏக்கரில் 15 சென்ட் அளவில் ஒவ்வொரு காய்கறி, கீரைகளை விதைக்க ஆரம்பிப்பேன்.

எனது நிலத்தில் வருடம் முழுவதுமே ஏதாவதொரு காய்கறியும் கீரையும் இருந்தபடி இருக்கும். அதாவது எந்தெந்த பட்டத்திற்கு என்ன மாதிரியான காய்கறிகள் வளருமோ அவற்றை சாகுபடி செய்வேன். அந்த வகையில் தற்போது அகத்திக்கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, குள்ள காசினிக்கீரை, கொம்பு காசினிக்கீரை, செடி முருங்கை போன்ற கீரைகளும் காராமணி, கொத்தவரங்காய், செடி அவரை, கொத்தவரை, சுரைக்காய், வெண்டைக்காய், பரங்கி, பூசணிக்காய், பச்சை மிளகாய் போன்றவற்றை சாகுபடி செய்து வருகிறேன். வரும் ஆடிப் பட்டத்திற்கு பாகல், புடலை, பீர்க்கன் போன்ற பந்தல் காய்கறிகளை பயிரிட தயாராகி வருகிறேன்.

ஆரம்பத்தில் பூச்சி மருந்துகளையும், கலப்பின உரங்களையும் செடிகளுக்கு கொடுத்து வந்தேன். ஆனால், அந்த உரங்களை செடிகளுக்கு தெளிக்கும்போது நம் மீதும் தெளிக்கும். அப்படி பூச்சி மருந்து பட்ட இடங்களில் தோல் நோய்களும், வாந்தி போன்றவையும் வரத் தொடங்கியது. நம் உடல் மீது இந்த உரங்கள் படும்போது நமக்கு நேரடியாக தீங்கு வருகிறதே, அவை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள் சாப்பிடுவதும் உடம்பிற்கு கேடுதானே என உணர்ந்தேன். உடனடியாக இயற்கை விவசாயத்திற்கு மாறி விட்டேன். ஆரம்பத்தில், செடிகளில் ஏற்படும் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த பத்திலைக் கரைசலை பயன்படுத்தினேன். அதையும் இயற்கை விவசாயம் சார்ந்த உரங்களை எப்படித் தயாரிப்பது என தொலைக்காட்சியில் பார்த்து கற்றுக்கொண்டேன். பின், அதனை தயாரித்து செடிகளுக்கு தெளித்து வந்தேன். அதைத்தொடர்ந்து பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மீன் அமிலம், பழக்கரைசல் என பலவகையான கரைசல்களைத் தயாரிக்கக் கற்றுக் கொண்டேன். அவற்றை எனது தோட்டத்திலேயே தயார் செய்து செடிகளுக்கு பாசனம் செய்கையில் நீரோடு கலந்து விடுவேன். இப்படியாக, தொடர்ந்து ஐந்து வருடங்கள் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன்.

கீரை மற்றும் காய்கறிகளில் தினசரி வருமானம் வந்தபடி இருக்கிறது.இந்தப் பயிர்களை விதைப்பது தொடங்கி இயற்கை முறையில் வளர்ப்பது வரை எனது வேலை. அறுவடை சீசன் வந்தபிறகு, எங்கள் ஊரில் உள்ள குறு வியாபாரிகள் எனது தோட்டத்திற்கே வந்து அறுவடை செய்து, சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்கிறார்கள். தினமும் 7 வியாபாரிகள் எனது விவசாய நிலத்திற்கு வந்து அவர்களுக்குத் தேவையான மகசூலை பறித்துச் செல்கிறார்கள். அந்த வகையில் தினமும் சுமார் 100 கீரைக்கட்டுகளும், அவர்களுக்குத் தேவையான அளவு காய்கறிகளும் அறுவடை செய்யப்படும். இவ்வாறு தொடர் அறுவடை நடைபெறுவதால் வருடம் முழுவதும் காய்கறிகள் சாகுபடி தொடர்ந்து நடக்கிறது’’ என மகிழ்வோடு கூறுகிறார் விவசாயி சண்முகம்.

தொடர்புக்கு:

ஏ.சண்முகம்: 73976 14377.

தினந்தோறும் அறுவடை செய்யப்படும் கீரை, காய்கறிகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.1500, மாதத்திற்கு ரூ.45 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது எனக்கூறும் சண்முகம், விதை விதைப்பது, களை பறிப்பது, தொழு உரம், இயற்கை உரம் தயாரிப்பிற்கு தேவையான வெல்லம் என ஒரு மாதம் 15 ஆயிரம் வரை செலவு செய்கிறார். இதுபோக ரூ.30 ஆயிரம் வரை லாபம் பார்க்கிறார்.

ரசாயனக் கலப்பில்லாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் சண்முகத்தை உற்சாகப்படுத்தும் வகையில், திருவள்ளூர் மாவட்ட கேவிகே, சில விவசாய உபகரணங்களை வழங்கிசிறப்பித்துள்ளது.