அவனியாபுரம்: அதிமுகவை பாஜ உடைக்கிறதா என்ற கேள்விக்கு நயினார் பதிலளித்து உள்ளார். பாஜ மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவை பாஜ உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் தான் இன்றைக்கு அவரை (எடப்பாடி) தலைவராக ஏற்று இருக்கிறோம். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக சொல்லி இருக்கிறார். எனக்கு அதைப் பற்றி முழுமையாக தெரியாது. ஓபிஎஸ் கூட்டணிக்கு எந்த நிபந்தனையும் தெரிவிக்கவில்லை. எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கக்கூடாது என்பது டிடிவியின் சொந்த கருத்து.
ஓபிஎஸ்சிடம் எந்த நேரமும் பேச தயாராக உள்ளேன். யார் மீதும் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அண்ணன் ஓபிஎஸ்சிடம் கண்டிப்பாக பேசுவேன். செங்கோட்டையன் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்ததால், எங்கள் கூட்டணிக்குள் எந்த வித இடர்பாடும் இல்லை. விஜய் சனிக்கிழமை பிரசாரம் செய்வது என்பதில் சனிக்கிழமை குறித்து உங்களுக்கு தெரியும். அதன் பிறகு நான் எதுவும் சொல்ல வேண்டாம். நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் என் மீது அளவற்ற அன்பும், பாசமும் வைத்திருக்கிறார்கள். கூட்டணி ஆட்சி விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி என்ன சொல்கிறாரோ அதுதான் நிலைப்பாடு. இங்கு பிளவு என்பது கிடையாது. இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து, பரமக்குடி சென்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலிக்குப் பிறகு நேற்று மாலை மதுரை விமான நிலையத்தில், நயினார் நாகேந்திரன் கூறுகையில், ‘‘முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருந்தால் கூட்டணி வெற்றிபெறாது என டிடிவி கூறியிருக்கிறார். அவர் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன், உள்துறை அமைச்சர் யாரை முதலமைச்சர் ஆக சொல்கிறாரோ அவரை நாங்கள் ஏற்போம். பிரசாரம் செய்வோம் என்றார். அதன் பிறகு கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்.
அதற்கடுத்து இந்த கருத்தை சொல்லி இருக்கிறார். கூட்டணி தொடர்பாக அவர் தான் தீர்மானிக்க வேண்டும். மக்கள்தான் முடிவு செய்வார்கள். மற்றபடி தனிப்பட்ட யாராலும் தோல்வி என்பதற்கு ஜோசியம் தான் சொல்ல முடியும். வரும்போது கூட ஓபிஎஸ்சிடம் போனில் பேசினேன். எங்களின் உறவு நன்றாகத்தான் உள்ளது. தேவைப்பட்டால் டிடிவியிடமும் பேசுவேன். அதிமுக பெரிய கட்சி. தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி. நிச்சயம் தேர்தலில் போட்டியிட்டு தேஜ கூட்டணி ஆட்சிக்கு வரும். இவ்வாறு கூறினார்.