ஓபிஎஸ்சுக்கு எதிராக போட்டியிட்ட 5 பன்னீர்செல்வங்களின் பெயர், சின்னங்கள் மார்க்கரால் அழிப்பு: வாக்குப்பதிவின்போது பரபரப்பு
பரமக்குடி: ஓபிஎஸ்சுக்கு எதிராக போட்டியிட்ட 5 பன்னீர்செல்வங்களின் பெயர், சின்னங்கள் மார்க்கரால் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார்கோவில் ஒன்றியத்தில் உள்ள பெருங்களூர் வாக்குச்சாவடி மையத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சின்னத்தை மட்டும் விட்டுவிட்டு, மற்ற சுயேட்சை வேட்பாளர்களான 5 பன்னீர்செல்வங்களின் பெயர் மற்றும் சின்னங்களை வாக்களிக்க சென்ற ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மார்க்கர் கொண்டு அழித்துள்ளனர். தகவல் அறிந்த திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாமலை மற்றும் பரமக்குடி ஒன்றிய நிர்வாகி துரைமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் மார்க்கர் கொண்டு மறைக்கப்பட்ட பெயர் மற்றும் சின்னத்தினை அழித்து மீண்டும் பெயர்கள், சின்னங்கள் தெரியும்படி செய்தனர். இதனால், பெருங்களூர் வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
* ஓபிஎஸ் தரப்பினர் பணப்பட்டுவாடா
பரமக்குடி நகர் பகுதியில் உள்ள அலங்கார மாதா பள்ளி வாக்குச்சாவடி மையத்தின் முன்பு பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு கூடியிருந்தவர்களை விரட்டியடித்தனர்.