நெல்லை: நெல்லையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: பாஜ சார்பில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்றங்களுக்கு உட்பட்ட 28 தொகுதிகளுக்கு பூத் கமிட்டி கூட்டம் வரும் 17ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நெல்லை தச்சநல்லூர் அருகே பைபாஸ் சாலையில் உலகம்மன் கோயில் எதிரேயுள்ள மைதானத்தில் மாநாடு போல நடக்கிறது.
இதில் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷா அல்லது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க வாய்ப்புள்ளது. பாஜ - அதிமுக கூட்டணியில் எந்தெந்த தொகுதி யாருக்கு என்பது இன்னமும் முடிவாகவில்லை.
எனவேதான் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலைக்கும், கூட்டணி கட்சிகள் போட்டியிட்டால் அதன் வேட்பாளர்களுக்கும் சேர்த்து ஓட்டு கேட்டு வருகிறார். ஓபிஎஸ்சை நாங்கள் ஒருபோதும் புறக்கணித்ததில்லை. நான் ஏற்கனவே அவரிடம் பேசியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* எம்ஜிஆர் கார் எண்ணில் பாஜ பிரசார வாகனம்
வரும் சட்டசபை தேர்தலை ஒட்டி பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள, அரியலூர் பாஜ முன்னாள் மாவட்ட தலைவர் ஐயப்பன், 4777 என்ற எண் கொண்ட பிரத்யேக வாகனத்தை தயார் செய்துள்ளார். இந்த வாகனத்திற்கான எண், எம்ஜிஆர் பயன்படுத்திய காரின் எண்ணாகும். நெல்லைக்கு கொண்டு வரப்பட்ட இந்த பிரசார வாகனத்தை நேற்று நயினார் நாகேந்திரன் இயக்கியதோடு, அவரே ஓட்டி நகர வீதியில் வலம் வந்தார்.