Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓபிஎஸ்க்காக நான் பேசாமல் வேறு யார் பேசுவார்; பாஜ கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே செல்ல நயினார்தான் காரணம்: டிடிவி மீண்டும் சரமாரி குற்றச்சாட்டு

* எங்களை வெளியேற ேவண்டும் என்று திட்டமிட்டே செயல்படுகிறார்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சியை அமித்ஷா மேற்கொண்டார். அதிமுகவில் இருந்து ஒருவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று தான் அமித்ஷா கூறினாரே தவிர, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என அமித்ஷா ஒருபோதும் கூறவில்லை. நயினாருக்கு செலக்டிவ் அம்னீசியாவா எனத் தெரியவில்லை. கூட்டணியை நயினார் நாகேந்திரன் சரியாகக் கையாளவில்லை. ஓபிஎஸ், டிடிவியுடன் சமரசம் பேசத் தயார் என மனமின்றி சொல்கிறார் நயினார் நாகேந்திரன். ஓபிஎஸ்க்காக பேச இவர் யார் என என்னை நயினார் கேட்கிறார். ஓபிஎஸ்க்காக நான் பேசாமல் வேறு யார் பேசுவார். நாங்கள் ஒன்றாகதான் அந்த கூட்டணிக்கு சென்றோம். ஒன்றாக இருப்போம், ஒன்றாக பயணிப்போம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தோம்.

எனக்காக அவரது மகன் போட்டியிட்ட தேனி தொகுதியை விட்டு கொடுத்து விட்டு, ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் ஓபிஎஸ் நின்றார். பிரதமர் மோடி தமிழகம் வந்த போது சந்திப்பதற்காக, ஓபிஎஸ் தொலைபேசியில் அழைத்தபோது நயினார் நாகேந்திரன் போனை எடுக்கவில்லை. மெசேஜ் அனுப்பியும் பதில் இல்லை. அதையெல்லாம் மறைத்து விட்டு, ‘‘என்னிடம் சொல்லி இருந்தால், அதற்கு நான் ஏற்பாடு செய்திருப்பேன்’’ என்று நயினார் சொல்கிறார். இது ஆணவம், அகங்காரம் தானே. நீங்கள் பாஜ மாநில தலைவராக இருந்தால், எங்களுக்கு என்ன? பாஜவுக்கு எது நல்லதோ அதை நயினார் செய்வதாக தெரியவில்லை. நாங்கள் வெளியே செல்வதற்கு காரணம் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் தான். அவர், நாங்கள் வெளியேற ேவண்டும் என்று திட்டமிட்டே செயல்படுகிறார். அண்ணாமலை என்னை பின்னிருந்து இயக்குவதாக சிலர் கூறுகின்றனர்.

அவ்வாறு யாரும் என்னை இயக்கவில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர். அண்ணாமலை எங்களை அழைத்தபோது மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காகவே எந்த நிபந்தனையும் இன்றி கூட்டணிக்கு சென்றோம். நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறியபோது, அண்ணாமலை எங்களை அவசரப்பட தேவையில்லை. பொறுமையாக இருங்கள், உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்றார். அவர் தலைவராக இருந்தபோது நடுநிலையுடன் செயல்பட்டார். கூட்டணி கட்சி தலைவர்களிடம் தன்மையாக நடந்து கொண்டார். ஆனால் நாங்களும், ஓபிஎஸ்சும் என்டிஏ கூட்டணியில் தொடர்வதை நயினார் நாகேந்திரன் விரும்பவில்லை.

பாஜ கூட்டணியில் இருந்து திடீரென நாங்கள் விலக வில்லை. நான்கு மாதமாக யோசித்து எடுத்த முடிவுதான். பழனிசாமி மட்டும் போதும், என நயினார் நினைக்கிறார். இபிஎஸ்சை அவர் தூக்கிப்பிடித்ததே நாங்கள் விலகக் காரணம். தமிழக மக்களின் மனநிலை அறிந்து முதலமைச்சர் வேட்பாளர் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்தோம். அது நடக்காததால் வெளியேறினோம். அமித்ஷா கூறியதை தாண்டி நயினார் பேசுகிறார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெற்று விடலாம் என நயினார் நினைக்கிறார். இவ்வாறு தெரிவித்தார்.

தவெகவுடன் கூட்டணியா?

‘தவெக தலைவர் விஜய்யுடன் அமமுக செல்லும் என கூறப்படுவது வெறும் யூகம். அப்படி நாங்கள் சென்றால் என்ன தவறு?’ என்று டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

‘எடப்பாடியை ஏற்க முடியாது: செங்கோட்டையனை சந்திப்பேன்’

டிடிவி.தினகரன் கூறுகையில், “துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியை எப்படி ஏற்றுக்கொள்வேன். பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டது அமமுக. முதல்வர் வேட்பாளராக அவரை ஏற்கவே முடியாது. அதிமுகவில் ஒருவரை தவிர எங்களுக்கு யார் மீதும் வருத்தம் இல்லை. திருந்த வேண்டியவர்களும், திருத்தப்பட வேண்டியவர்களும் இபிஎஸ் அணியினர் தான். எடப்பாடியை நான் முதல்வராக ஏற்று கொண்டால், என் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு நான் பதில் கூறவேண்டும். இரட்டை இலையை சிதைத்து விட்டார்கள். சட்டசபை தேர்தலுக்கு பின் அதிமுக பின்னடைவை சந்திக்கும். பதவிக்காக இருந்தவர்கள் அமமுகவில் இப்போது இல்லை. என்னுடன் வந்த 18 எம்எல்ஏக்களில் தற்போது 9 பேர் உள்ளனர். நாங்கள் வெற்றி தோல்வியை தாண்டி அரசியலில் இருக்கிறோம். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்.” என்றார்.