வஉசியின் 154வது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம், போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு, போடி எம்எல்ஏவும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மூத்த முன்னோடியான செங்கோட்டையன், அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர் காலத்தில் இருந்து மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார்.
அதிமுகவில் பல்வேறு பிரச்னைகள் வந்தபோது கூட, கட்சி வளர்ச்சிக்காக பணியாற்றியும், தொண்டர்களை ஒருங்கிணைத்தும் உழைத்த நபர்களில் அவரும் ஒருவர். செங்கோட்டையன் கருத்துப்படி, அனைவரையும் ஒருங்கிணைத்தால்தான் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர முடியும். செங்கோட்டையன் தனது மனதின் குரலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவருடைய இந்த எண்ணம், மனசாட்சி நிறைவேற வாழ்த்துகள். நாங்களும் அதற்காகத்தான் முயற்சி செய்கிறோம். அதிமுக தோன்றியதிலிருந்து தொடர்ச்சியாக 5 வருடம் தேர்தல்களில் தோல்வி கண்டது கிடையாது. கடந்த 5 வருடங்களாக அதிமுக சக்திகள் பிரிந்து கிடப்பதால் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
தொண்டர்கள் பல சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்றால், அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
இதற்காகத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுக தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்தில் தொண்டர்களை யாராலும் வெளியேற்ற முடியாது. செங்கோட்டையன் உட்பட அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என யார் சொன்னாலும், அவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும், பக்கபலமாகவும் நிற்போம். எல்லோரும் ஒன்றிணைந்தால் தான் அதிமுகவை வெற்றி அடையச் செய்ய முடியும். இவ்வாறு கூறினார்.