கோவை வரும் பிரதமருக்கு எதிர்ப்பு: விவசாயிகள், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டத்தால் பரபரப்பு
கோவை: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நேற்று நிராகரித்தது. கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தருகிறார். வேளாண் மாநாட்டில் பங்கேற்க கோவை வரும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவைக்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு துரோகம் செய்துவிட்டது. கோவையின் வளர்ச்சியை தடை செய்துவிட்டு கோவையில் மோடிக்கு என்ன வேலை? கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்காதே என்றும், உடனடியாக அனுமதி தர வேண்டும் என்று போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர்.
அதேபோல வேளாண் மாநாட்டை புறக்கணித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இயற்கை வேளாண்மைக்கு முற்றிலும் எதிரான மரபணு மாற்றப்பட்ட நெல் விதிகளை இறக்குமதி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இயற்கை விவசாயத்துக்கு மானியம் இல்லை. மரபணு விதைகளை இறக்குமதி செய்ய டெல்லியில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துவிட்டு வேளாண் மாநாடு நடத்துவதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


