டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம்
புதுடெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் காற்று மாசு கடுமையான பிரிவில் உள்ளது. மக்கள் சுவாச பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள். காற்று மசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகரித்து வரும் காற்றுமாசு பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 4ம் நாள் அமர்வு இன்று தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், முகக்கவசம் அணிந்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நேற்று முன்தினமும், புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராக நேற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

