Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மயிலாடும்பாறை அருகே விவசாய நிலங்களை அளவீடு செய்ய எதிர்ப்பு

வருசநாடு : மயிலாடும்பாறை அருகே விவசாய நிலங்களை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆண்டிபட்டி தாலுகா, மயிலாடும்பாறை அருகே உள்ள தாழையூத்து கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அப்பகுதியில் உள்ள நிலங்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள வனச்சரகங்களை இணைத்து ஒருங்கிணைந்த மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றி அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து வனச்சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கண்டமனூர் பகுதியில், விளைநிலங்களுக்கு சென்று நிலங்களை அளவீடு செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன், கண்டமனூர் வனச்சரகர் சிவாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைக்கனி இளையராஜா உள்ளிட்டோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.