Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்னும் 10,000 பேரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு குரூப்-2, 2ஏ தேர்வு அறிவிப்பு நாளை மறுநாள் வெளியீடு: சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி

சென்னை: சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை பொறுத்தவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கடந்தாண்டு 10,701 பேர் பணியமர்த்தப்பட்டனர். இந்தாண்டு ஜூன் மாதம் வரை 11,027 பணியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு 4,300 பேர் அடுத்த இரண்டு மாதங்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறைப்படி தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் வரக்கூடிய அறிவிப்பின்படி இன்னும் 10 ஆயிரம் பேரை ஒட்டுமொத்தமாக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் 15ம் தேதி வெளியிடப்படும். இந்தாண்டு தேர்வுக்கான கால அட்டவணைபடி உரிய முறையில் தேர்வுகளை நடத்திவிட்டோம். குரூப் 4 தேர்வு தாளை திருத்துவதற்கான கணினி மையம் உள்ளது. ஏற்கனவே, 3 மையம் இருந்த நிலையில், அதனை 6 மையமாக அதிகரித்துள்ளோம். இதனால் 1 லட்சம் தேர்வு தாளை திருத்தலாம்.

பலவிதமான இடஒதுக்கீடு உள்ளதால் அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்வோம். தேர்வு தாளை திருத்துவது என்பது ஒரு மாதத்தில் திருத்திவிடலாம் ஆனால், இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு என்பது இரண்டு மூன்று மாதங்களாகிவிடும். தேர்வுக்கான கேள்விகள் ரகசியமாக தேர்வு செய்யப்படுகிறது. யாராலும் பார்க்க முடியாது. சர்ச்சைக்குரிய மற்றும் அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என தேர்வு வினாக்கள் தயாரிக்கும் குழுவுக்கு கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய மற்றும் அரசியல் கேள்விகளை கேட்பவர்கள் கேள்வி உருவாக்கும் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்.

அதிக அளவில் தேர்வர்கள் இருப்பதால் வட்டார அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. காவல்துறையின் பாதுகாப்பு, கேமரா கண்காணிப்புடன் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கொண்டு சென்று சேர்க்கப்படுகிறது. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கொண்டு செல்லும் போது அதிகாரிகள் முழு கண்காணிப்பில் இருப்பார்கள். இது மிகவும் பாதுகாப்பான முறையில் தான் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் எந்த இடத்திலும் வினாத்தாள் வெளியாக வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.