Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாய்ப்புகளை கைப்பற்றுங்கள்!

வாய்ப்புகளை வளமாக்க விரும்பினால், நம்முடைய திறமைகளை தினம், தினம் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு செடி தினம் தினம் சிறிய, சிறிய இலைகளை விட்டுக் கொண்டே இருக்கின்றது. ஐந்தாண்டுகளுக்கு பிறகு, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரிய மரமாக மாறிவிடுகிறது அல்லவா? அது போல ஒவ்வொரு நாளும் நம்முடைய அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒதுக்கிக் கொள்ள வேண்டும். வழக்கமான பாதையில் இருந்து வளர்ச்சிப் பாதைக்கு மாறுவதற்கு இதுதான் ரகசியம் என்பதை புரிந்துகொண்டு அறிவாற்றலை வளர்த்துக் கொண்டே இருப்போம்.அதாவது நம்முடைய சௌகரியமான இடத்தில் இருந்து வழக்கமான வாழ்க்கையில் இருந்து வளர்ச்சிப் பாதைக்கு நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும். புதிய, புதிய திறமைகளையும், ஆற்றல்களையும் வளர்த்துக் கொண்டு இருந்தால்தான் எதிர் வருகின்ற வாய்ப்புகளை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கூட்டுப் புழுவிலிருந்து பட்டாம்பூச்சி எப்படி வெளியே வருகின்றது என்பதைத் தன்னுடைய மாணவர்களுக்குக் காட்டுவதற்காக ஒரு ஆசிரியர் கூட்டுப்புழுக்களை எடுத்து மேஜையில் போட்டுவிட்டு அவர் வெளியே சென்று விட்டார். இந்த கூட்டில் இருந்து பட்டாம்பூச்சி எப்படி வெளியே வரும் என்பதை நீங்கள் கவனியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வந்த அவர் எல்லாப் பட்டாம்பூச்சிகளும் பறக்க முடியாமல் சிறகு உடைந்து கீழே கிடப்பதைப் பார்த்தார். ஆச்சரியப்பட்டு மாணவர்களிடம், எப்படி இந்த பட்டாம்பூச்சிகள் பறக்க முடியாமல் சிறகுகள் உடைந்து கிடக்கின்றன என்று கேட்டார்.அதற்கு மாணவர்கள் இந்த பட்டாம்பூச்சிகள் கூட்டை உடைத்துக் கொண்டு கூட்டில் இருந்து வெளியே வருகின்ற பொழுது அவை மிகவும் சிரமப்பட்டன. அவை சிரமப்படுகின்றன என்று நாங்கள் கொஞ்சம் கூட்டைப் பெரிதாக உடைத்து விட்டோம். அதனால் பறக்க முடியாமல் கீழே விழுந்து விட்டன என்று மாணவர்கள் சொன்னார்கள்.

இங்கேதான் நாம் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அந்த கூட்டில் இருந்து வெளியே வருகின்ற பட்டாம்பூச்சி மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய சிறகுகளை இப்படியும், அப்படியும் அசைத்து முயன்று வெளியே வரும்பொழுது தான் அந்த சிறகுகள் பலப்படும். பட்டாம்பூச்சி வெளியே வருவதற்குச் சிரமப்படுகிறது என்று நாம் கூட்டை உடைத்து விட்டால், பட்டாம்பூச்சியால் பறக்க முடியாது. அதுபோலத்தான் நம்முடைய குழந்தைகள் வளருகின்ற பொழுது ஒவ்வொரு திறமையையும் அவர்கள் கற்றுக் கொண்டே வர வேண்டும். அப்படி கற்றுக் கொண்டு வந்தால் தான் அந்த குழந்தைகள் திறன் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களை சிரமப் படுத்த வேண்டாம் என்று எல்லா வேலையும் நாமே செய்து கொண்டிருந்தால் அந்த கூட்டுக் புழுவில் இருந்து வருகின்ற பட்டாம்பூச்சி போல எப்படி பறக்க முடியாமல் சிறகு உடைந்து கிடந்ததோ, அதுபோல்தான் நம்முடைய குழந்தைகளும் எதிர்காலத்தில் இருப்பார்கள் என்பதைப் பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.எனவே கஷ்டங்கள் தான் நம்மை வலுப்படுத்துகின்றன. துயரங்கள் தான் நம்மை செம்மைப்படுத்துகின்றன. இத்தகைய உண்மையை நாம் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை மங்கையை சொல்லலாம்.

மும்பை தாராவியை சேர்ந்த 13 வயதாகும் இளம்பெண் மலீஷா கார்வாதான் தற்போது மாடல் உலகின் குழந்தை நட்சத்திரமாக வலம் வருகிறார். 2020ம் ஆண்டு வரை தனது தலைக்கு மேல் நிரந்தரமாக ஒரு கூரை கூட இல்லாமல், தினசரி உணவுக்கே தன் குடும்பத்துடன் போராடி வந்தவர். தற்போது தன்னுடைய அசாத்தியமான திறமையின் மூலம் இன்ஸ்டாகிராமில் 2.6 லட்சம் பின்தொடர்பவர்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.2020ம் ஆண்டு ஒரு மியூசிக் ஆல்பம் படப்பிடிப்பின் போது அமெரிக்க நடிகரான ராபர்ட் ஹாஃப்மேன் மலீஷாவை பார்த்துவிட்டு அவரை மாடலாக்க முடிவு செய்துள்ளார். முதலில் அவருக்கு தேவையான கல்வி மற்றும் இதர வசதிகளை பூர்த்தி செய்ய இன்ஸ்டாகிராம் மூலம் கணக்கு தொடங்குதல், மேலும் சில நிதி திரட்டும் இணையதளங்கள் மூலம் இந்த பெண்ணுக்கான நிதியைத் திரட்டி கொடுத்துள்ளார். அதற்கு பிறகு கொஞ்சம், கொஞ்சமாக மாடல் சூட்டிங்கில் ஈடுபட இன்ஸ்டாக்ராமிலும் பின்தொடர்பவர்கள் அதிகமாகியுள்ளனர்.

இந்நிலையில், யுவதி கலெக்‌ஷன்ஸ் (Yuvati Collections), ஃபாரஸ்ட் எஸன்சியல் (Forest essentials ) போன்ற முன்னணி நிறுவனங்களில் விளம்பரங்களில் அதன் முகமாக நடிக்க ஆரம்பித்தார் மலீஷா.அதேபோல் உலக அளவில் முன்னணி பத்திரிகைகளான வோக், காஸ்மோபாலிட்டன் போன்ற புகழ்பெற்ற ஃபேஷன் பத்திரிகைகளில் இவருடைய புகைப்படம் அட்டைப் படத்தில் வெளியாகி சாதனை படைத்துள்ளது. நேர்காணலில் பேசும்போது எல்லோரும் குடிசைப்பகுதிகளில்(Slum) வாழ்ந்தது எவ்வளவு மோசமான அனுபவம் என்று பலர் கேட்கும்போது நான் குழம்பி போகிறேன். என்னுடைய வீடு எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால், பல நாட்கள் நானும் என் சகோதரனும் உணவில்லாமல் தூங்கப்போவதுதான் கஷ்டமாக இருந்தது என்றும், எங்கள் வாழ்வாதரத்திற்காக நாங்கள் பல்வேறு வேலைகளை பார்த்து வந்தோம் என்கிறார் மலீஷா.

பல நேரங்களில் சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு சென்று அங்கு ஏதாவது நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று இவரும், இவர் தம்பியும் பார்த்து கொண்டிருப்பார்களாம். அப்படி ஒரு நாள்தான் நடிகர் ராபர்ட் கண்களில் பட்டு இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார் மலீஷா. தற்போது இரண்டு ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.ஏற்கனவே, ‘‘லிவ் யுவர் ஃபெய்ரி டேல்’’ (live your fairytale) என்ற குறும்படத்தில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனை பெருமைப்படக்கூடிய மகத்தான சாதனையாக பார்க்கப்படுகிறது.

மலீஷாவின் வாழ்க்கைப் பயணம் என்பது ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்தின் கதாநாயகனுடன் ஒப்பிடத்தக்கது. அதாவது, பசியும் பட்டினியும் சூழ்ந்த குடிசைப் பகுதி வாழ்க்கையில் இருந்து கோடீஸ்வரனைக் காட்டும் கற்பனைக் கதைதான் ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ என்றால் மலீஷா உண்மையிலேயே ஒரு ஸ்லம்டாக் மில்லியனர்தான். ஆம், அவரது நிஜவாழ்க்கையே முன்னோடியானது. அதாவது, அழகு என்பது தோலின் நிறத்தால் வரையறுக்கப்படுவது இல்லை. மாறாக, ஒருவரின் உள்ளம் மற்றும் தன்னம்பிக்கையால் வரையறுக்கப்படுகிறது என்பதற்கு மலீஷா மிகச் சிறந்த உதாரணம்.இவரின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால், கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி நம்முடைய திறமைகளை வெளிப்படுத்தினால் மலீஷாவை போல நீங்களும் எந்தத் துறையிலும் வெல்லலாம் என்பது தான்,எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள்! எத்தனை தடைகள் வந்தாலும் உடைத்தெறியுங்கள்!உங்களையும் இந்த உலகம் ஒரு நாள் ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்கும்.