ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கிருஷ்ணரின் செய்தியை நாங்கள் பின்பற்றினோம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
குருசேத்திரம்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பொறுத்தவரையில் கிருஷ்ணரின் செய்தியை நாங்கள் பின்பற்றினோம் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்தார். அரியானா மாநிலம் குருசேத்திரத்தில் நடந்த 10வது சர்வதேச கீதை மாநாட்டைத் தொடங்கி வைத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், கீதை விழாவிலும் கலந்து கொண்டு புனித பிரம்மசரோவர் கரையில் பிரார்த்தனை செய்தார். அதன்பிறகு அவர் கீதை மாநாட்டில் பேசும் போது,’ ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை, இந்தியாவின் நடவடிக்கை, பழிவாங்கலுக்காகவோ அல்லது லட்சியத்திற்காகவோ அல்ல, மாறாக நீதியான ஆட்சியை நிறுவுவதற்காகப் போரிட வேண்டும் என்று பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் வழங்கிய செய்தியால் வழிநடத்தப்பட்டது. நீதியின் பாதையைப் பின்பற்றுபவர் ஒருபோதும் பயப்படுவதில்லை என்று கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கற்பித்தார். பஹல்காமில் நடந்த கொடூரமான செயல் இன்னும் தேசிய உணர்வைத் தொந்தரவு செய்கிறது.
அப்பாவி சுற்றுலாப் பயணிகளிடம் அவர்களின் மதம் குறித்து கேட்ட பிறகு அவர்கள் கொல்லப்பட்டபோது பயங்கரவாதிகள் ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலைச் செய்தனர். பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்போது இந்தியா அமைதியாக இருக்காது. அந்த சம்பவம் இந்தியாவின் அமைதியை விரும்பும் தன்மையை மட்டும் சவால் செய்யவில்லை என்று நான் நம்புகிறேன்; பயங்கரவாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் இந்தியாவின் கண்ணியம் அதன் பலவீனம் என்று கருதினர், ஆனால் போர்க்களத்தில் தர்மத்தைப் பாதுகாக்க இரக்கமும் உத்வேகமும் உள்ள இந்தியா கீதையின் நாடு என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். ஆபரேஷன் சிந்தூர் மூலம், ஆயுதப்படைகள் அவர்களுக்கு ஒரு கடுமையான பதிலடியைக் கொடுத்தன. அதை அவர்களால் இன்று வரை மறக்க முடியவில்லை. இவ்வாறு பேசினார்.
* சிந்து பகுதி நாளையே இந்தியாவுக்கு சொந்தமாகலாம்
டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசும்போது,’ பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியை சேர்ந்த இந்துக்கள், குறிப்பாக அவரது தலைமுறையை சேர்ந்தவர்கள், இந்தியாவில் இருந்து சிந்து பிரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை என அத்வானி குறிப்பிட்டுள்ளார். சிந்துவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் சிந்து நதியை புனிதமாக கருதினர். இன்று சிந்து நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாகரீக ரீதியாக எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். நிலத்தை பொறுத்தவரை எல்லைகள் மாறலாம். யாருக்கு தெரியும், நாளையே சிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பலாம்’ என்றார்.



