‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் 12 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன; 100 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்: இந்திய ராணுவ இயக்குநர் தகவல்
புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 12 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் கடந்த மே 7ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியது.
பின்னர், இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்களின் (டி.ஜி.எம்.ஓ) பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மே 10ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், ‘பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தன்று மரணத்திற்குப் பின் வழங்கிய ராணுவ விருதுகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அவர்களின் உயிரிழப்பு 100க்கும் அதிகமாக இருந்திருக்க வேண்டும். தரை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தானின் 12க்கும் மேற்பட்ட விமானங்கள் அழிக்கப்பட்டது.
கிஸ்தானின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அனைத்தும் இடைமறிக்கப்பட்டு படுதோல்வி அடைந்தன. தேவைப்பட்டிருந்தால் இந்தியக் கடற்படையும் தாக்குதலில் இறங்கத் தயாராக இருந்தது. பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமான மூன்று பயங்கரவாதிகளும் 96 நாட்களுக்குப் பிறகு தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர்’ என்று கூறினார். இந்த மோதலுக்குப் பிறகு, பல இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ஆரம்பத்தில் கூறியிருந்தாலும், தனது தரப்பு இழப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.