ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி ஜேஇஎம், ஹிஸ்புல் முஜாகிதீன் இருப்பிடங்கள் மாற்றம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஓட்டம்
புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளான ஜெய்ஷ் இ முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தங்களது தளங்களை மாற்றத்தொடங்கி உள்ளன. இந்த தீவிரவாத குழுக்கள் தற்போது கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு தங்களது ராணுவ தளங்களை மாற்றத்தொடங்கி உள்ளதாக பாதுகாப்பு மற்றும் ராணுவ நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த குழுக்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்திய தாக்குதல்களுக்கு ஆளாககூடிய பகுதியாக கருதுகின்றன. அதே நேரத்தில் கைபர் பக்துன்க்வா ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் இருப்பதால் பாதுகாப்பானதாக கருதி இந்த இடமாற்றத்தை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் பாகிஸ்தானின் சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பின் கீழ் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பானது கூட்டங்களை நடத்தியது. இதில் மூத்த ஜேஇஎம் தலைவர் முலானா முப்தி மசூத் இலியாஸ், அபு முகமது ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.