ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாக். கெஞ்சியதால் போரை நிறுத்தினோம்: ஐநாவில் இந்தியா வலுவான பதிலடி
ஐக்கிய நாடுகள்: ஐநா பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு பதிலளித்த இந்திய தூதர், ‘‘தீவிரவாதம் தான் பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கையின் மையம்’’ என்றும், ‘‘பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தப்பட்டது’’ என்றும் சரமாரி பதிலடி கொடுத்தார். ஐநா பொதுச்சபையின் 80வது கூட்டம் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்து வருகிறது. இதில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவின் 7 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வென்றதாகவும், டிரம்ப் தலையிட்டதால் தான் பேரழிவு தவிர்க்கப்பட்டதாகவும், தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பெட்டல் கெலாட் ஐநா கூட்டத்தில் நேற்று பேசியதாவது: இந்த சபை பாகிஸ்தான் பிரதமரின் அபத்தமான நாடகங்களை கண்டது. அவர் மீண்டும் ஒருமுறை தங்கள் வெளியுறவுக் கொள்கையின் மையமாக இருக்கும் தீவிரவாதத்தை மகிமைப்படுத்தி உள்ளார். எந்தவொரு நாடகத்தாலும், பொய்களாலும் உண்மையை மறைக்க முடியாது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்த சம்பவத்திற்கு தீவிரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பை ஆதரித்து பாதுகாத்தது பாகிஸ்தான்.
தீவிரவாதத்தை நிலைநிறுத்தி, ஏற்றுமதி செய்யும் பாரம்பரியத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்குதாரர் போல் நடித்து 10 ஆண்டுக்கும் மேலாக ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது என்பதை நினைவில் கொள்வோம். ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய படைகளால் பஹாவல்பூர், முரிட்கேவில் தீவிரவாத தளங்களில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் இறுதிச் சடங்குகளில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்திய புகைப்படங்களை இந்த உலகம் பார்த்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. மே 9ம் தேதி வரையிலும் வலுவான பதிலடி தருவோம் என கூறி வந்த பாகிஸ்தான் ராணுவம், மே 10ம் தேதி போரை நிறுத்துமாறு கெஞ்சிக் கேட்டது. அதனால் தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினோம். எங்கள் தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ விமான ஏவுதளங்களின் ஓடுபாதைகள், ஹேங்கர்களில் ஏற்பட்ட சேதங்கள் பாகிஸ்தான் பிரதமருக்கு வெற்றியாக தோன்றினால், அதை அவர் கொண்டாடுவதை நாங்கள் வரவேற்கிறோம். பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை உண்மையிலேயே நம்பினால், உடனடியாக அனைத்து தீவிரவாத முகாம்களையும் மூடிவிட்டு, இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
* யாரும் தலையிட இடமில்லை
இந்தியா-பாகிஸ்தான் போரை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியதையும் இந்திய தூதர் பெட்டல் கெலாட் மறுத்தார். அவர் கூறுகையில், ‘‘பாகிஸ்தானுடனான எந்தவொரு தீர்க்கப்படாத பிரச்னையும் இருதரப்பு ரீதியாகவே தீர்க்கப்படும். இதில் எந்தவொரு மூன்றாம் தரப்புக்கும் இடமில்லை’’ என்றார்.