இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான தாக்குதலுக்கு பிறகு ராணுவத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பதவியை உருவாக்குவதற்காக பாகிஸ்தான் தனது அரசியலமைப்பில் சட்ட திருத்தம் கொண்டு வருகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடந்து பல மாதங்கள் நடந்த பின்னர் பாகிஸ்தான் முப்படைகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் ஒருங்கிணைப்பை உருவாக்கும் முயற்சியாக பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி பதவியை உருவாக்குவதற்கு முடிவு செய்துள்ளது.
இதற்காக அரசியலமைப்பின் 243 வது பிரிவின் திருத்த மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பு திருத்தம் மூலம் கொண்டு வரப்படும் இந்த மாற்றம், ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படும். மூன்று படைகளிடையே அதிக ஒருங்கிணைப்பு மற்றும் ஒருங்கிணைந்த கட்டளையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட பிரிவு 243 இல் முன்மொழியப்பட்ட திருத்தத்தின் கீழ், பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பதவி பரிசீலனையில் உள்ளது.
இந்த நடவடிக்கை, ‘‘சமீபத்திய பாகிஸ்தான்-இந்தியா போர் சூழ்நிலைகளிலிருந்து பெறப்பட்ட பாடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு பதிலைக் கோரும் நவீன போரின் வளர்ந்து வரும் தன்மை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுள்ளது’’ என்று பாகிஸ்தான் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த திருத்தத்தின்படி ராணுவத்தி்ன் தலைமை தளபதியாக இருப்பவரே முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்படுவார். பிரதமரின் ஆலோசனைகளின் அடிப்படையில் முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அசீம் முனீருக்கு வாய்ப்பு
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் வரும் 28 ம் தேதி ஓய்வு பெற உள்ளார். மேலும் புதிய ஒருங்கிணைந்த கட்டளைக்கு தலைமை தாங்குவதற்கான முன்னணி அதிகாரிகளில் அவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

