ஆபரேஷன் சிந்தூரில் தீவிரவாதி மசூத் அசாரின் குடும்பம் அழிக்கப்பட்டது: ஜெய்ஷ்-இ-முகம்மது கமாண்டர் தகவல்
இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் மசூத் அசாரின் குடும்பத்தை இந்திய ராணுவம் அழித்துவிட்டதை ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் கமாண்டர் மசூத் இலியாஸ் காஷ்மீரி உறுதிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் பஹவல்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகம்மது, இந்தியாவுக்கு எதிராக நாடாளுமன்றத் தாக்குதல், பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல், புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பை இந்தியா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை, பிரிக்ஸ் போன்ற சர்வதேச அமைப்புகளும் தடை செய்துள்ளன. இதன் தலைவராக மசூத் அசார் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் கமாண்டரான மசூத் இலியாஸ் காஷ்மீரி என்பவர், பாகிஸ்தானில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் புடைசூழ மேடையில் பேசும் மசூத் இலியாஸ் காஷ்மீரி, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் பாதிப்பு குறித்து உணர்ச்சிபொங்க பேசியுள்ளார். அவர் தனது பேச்சில்,’ இந்த நாட்டின் (பாகிஸ்தானின்) எல்லைகளைப் பாதுகாக்க பயங்கரவாதத்தை தழுவினோம். டெல்லி, காபூல், கந்தஹார் மீது தாக்குதல்களை நடத்தினோம். அனைத்து தியாகங்களையும் செய்த பிறகு, மே 7ஆம் தேதி பஹவல்பூரில் இந்திய படைகள் நடத்திய தாக்குதலில் மவுலானா மசூத் அசாரின் குடும்பம் பூண்டோடு அழிக்கப்பட்டது’ என்றார்.
அவரது இந்த பேச்சு, இந்திய ராணுவத்தின் தாக்குதல் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஹவல்பூரில் நடத்தப்பட்ட தாக்குதலில் மசூத் அசாரின் மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன. இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் முக்கிய கமாண்டர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தி இருப்பது, இந்திய ராணுவத்தின் தாக்குதலின் தீவிரத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.