ஆபரேஷன் சிந்தூரில் கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிட செய்தது இந்தியா: பிறந்தநாளில் பிரதமர் மோடி பேச்சு
தார்: ‘‘ஆபரேஷன் சிந்தூரின் போது கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை இந்திய வீரர்கள் மண்டியிட வைத்தனர். பாகிஸ்தான் தீவரவாதி ஒருவன் அழுதபடி தனது அவல நிலையை விவரிப்பதை உலகம் கண்டது’’ என தனது 75வது பிறந்தநாளில் பிரதமர் மோடி பேசி உள்ளார். தனது 75வது பிறந்தநாள் தினமான நேற்று பிரதமர் மோடி, மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஒருங்கிணைந்த மெகா ஜவுளிப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிய அவர், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பம்’ எனும் இயக்கத்தையும் 8வது ஊட்டச்சத்து மாதத்தையும் தொடங்கி வைத்தார். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.
பொதுமக்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: இது புதிய இந்தியா, எந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது. எதிர்களை அவர்களின் இடத்திற்குள் நுழைந்து தாக்கும். பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் நமது சகோதரிகள், மகள்களின் குங்குமத்தை அழித்தனர். நாங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி தீவிரவாதிகளின் ஏவுதளங்களை இடித்து தகர்த்தோம். நமது துணிச்சலான வீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானை மண்டியிட வைத்தனர். தீவிரவாதி ஒருவன் கதறி அழுதபடி தனது அவல நிலையை விவரிப்பதை நாடும், உலகமும் கண்டது. (ஜெய்ஷ் இ முகமது தளபதி ஒருவன் இந்திய ராணுவத்தினர் தங்கள் மறைவிடங்களுக்குள் நுழைந்து எவ்வாறு தாக்கினர் என்பதை விளக்கும் வைரல் வீடியோ பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டார்).
தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் ஆரோக்கியம் தான் பாஜ அரசின் முன்னுரிமை. இதற்காக தொடங்கப்பட்ட ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பம் இயக்கத்தில் நாடு முழுவதும் உள்ள பெண்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என வலியுறுத்துவதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். எந்த தயக்கமும் இல்லாமல் மருத்துவ முகாம்களில் நீங்கள் கலந்து கொண்ட வேண்டும். இதில் பரிசோதனைகள், மருந்துகள் அனைத்தும் இலவசம். உங்கள் உடல் நலத்தை விட அரசு கஜானா எங்களுக்கு முக்கியமில்லை. கர்ப்பிணிகள், பெண்களின் ஊட்டச்சத்துக்காக 8வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தை தொடங்கி உள்ளோம். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
* உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள்
இந்திய தயாரிப்புகளைளே வாங்குங்கள் என பிரதமர் மோடி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். இது குறித்து நேற்றைய நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘ 140 கோடி இந்திய மக்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். நீங்கள் எதை வாங்கினாலும் அது நம் நாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு இந்தியரின் வியர்வையை தாங்கியிருக்க வேண்டும். அது இந்திய மண்ணின் மணத்தை கொண்டிருக்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்கும் கடைகளில் ‘இது சுதேசி பொருட்கள்’ என்ற பலகைகள் வைக்கப்பட வேண்டும்’’ என வலியுறுத்தினார்.